பயிர்க்காப்பீடு தில்லுமுல்லு! தி.மு.க உண்ணாவிரதம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, புலியடிதம்பம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016- 2017 ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத் தொகையை இன்று வரை வழங்காததைக் கண்டித்து, தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் மேப்பல் சக்தி, மார்த்தாண்டன் தலைமையில் புலியடி தம்பத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, உண்ணாவிரதத்தை முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்தார்.

அவர் பேசும்போது, " தி.மு.க ஆட்சியில் விவசாயக்கடன் தள்ளுபடிசெய்தோம். ஆனால், மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சித்துவருகின்றன. கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடுசெய்த 1023  விவசாயிகளுக்கு, ஏறத்தாழ 3 கோடி ரூபாய்க்கு மேல் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. தொடக்க வேளாண்மை வங்கியில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள், மத்திய தொடக்க வேளாண்மை வங்கியில் கணக்கு தொடங்கி, பயிர் இன்ஷூரன்ஸ் செய்ய வேண்டும் என்கிறது அரசு. விவசாயிகள், உள்ளூரில் இருக்கும் வங்கியை விட்டு வெளியே போய் கணக்கு தொடங்க வேண்டும் என்பது சாத்தியமா? 

ஐ.சி.ஐ.சி. ஐ லம்பார்டு வங்கியில் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டாம் என்று விவசாயிகள் பல முறை முறையிட்டும், வேறு அரசுத் துறை வங்கிக்கு மாற்ற மறுக்கிறது நம்முடைய அரசாங்கம். ஆக, இந்த தனியார் வங்கிகள் விவசாயிகளிடம் வாங்கிய பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அடுத்து, தி.மு.க ஆட்சிதான். அப்போது இதுபோன்ற குறைகள் சீர்செய்யப்படும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!