மரியாதைக் குறைவாக நடத்தும் செல்லூர் ராஜூ!-கொதித்த கூட்டுறவுத்துறை ஊழியர்கள்

அமைச்சர் செல்லூர் ராஜு, தங்களை மரியாதைக் குறைவாக நடத்துவதாகக் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் சார்பில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்களது வழக்கமான கோரிக்கைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அவைகளை நிறைவேற்றித்தரும்படி கோஷமிட்டனர். அப்போது அவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜு-க்கு எதிரான கோஷங்களையும் முழங்கினர். தவிர, இந்த ஆர்ப்பாட்டம்குறித்து அச்சடிக்கப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்களிலும் முதல் கோரிக்கையாக, தங்களது துறை அமைச்சரான செல்லூர் ராஜு நடவடிக்கை பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது.
விஷயம் என்னவென்று விசாரித்தோம். "அய்யோ, அதை ஏன் கேக்கறீங்க. எங்கள் துறை சார்பாக சென்னையிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அப்பப்போ ஆய்வுக் கூட்டங்கள் நடக்கும். துறை சார்ந்து எடுக்கப்பட்ட, எடுக்கப்படப் போகிற, நிலுவையில் இருக்கும் முடிவுகள், நடவடிக்கைகள்குறித்து அந்தக் கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் ஆய்வுகள் செய்யப்படும். அந்தக் கூட்டத்தில் வயதிலும் அனுபவத்திலும் மூத்த அதிகாரிகளை அமைச்சர் மரியாதைக் குறைவாக நடத்துகிறார். இது எங்கள் துறை ஊழியர்களுக்கு பெரிய வேதனையைத் தருகிறது. அமைச்சர் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதை எங்களது முதல் கோரிக்கையாக வைத்து, இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!