வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (29/11/2017)

கடைசி தொடர்பு:08:09 (29/11/2017)

"அரசமரம் குளத்தில் விழுந்து ஒன்றரை வருஷம் ஆகுது, இன்னும் அப்புறப்படுத்தல..!" -இது நடுப்பட்டி கதை

 


புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே இருக்கிறது, நடுப்பட்டி கிராமம். இந்த ஊருக்குள் நுழையும் பிரதான சாலையை ஒட்டி இருக்கிறது வாத்தியார் குளம். இதன் கரையோரத்தில் ஓங்குதாங்காக இரண்டு அரசமரங்கள் எழில் பரப்பி நின்றிருந்தன. அதில், குட்டி மரம் வேருடன் சாய்ந்து, அப்போது நீர் நிரம்பியிருந்த வாத்தியார் குளத்தில் விழுந்துவிட்டது. இது நடந்து ஒன்றரை வருஷம் ஆகிடுச்சு. ஆனா, அந்த மரம் இன்னமும் அப்புறப்படுத்தாமலேயே கிடக்கிறது. குளமும் இப்போது வற்றிவிட்டது.

"வேற மரமா இருந்திருந்தா, நாங்களே ஒண்ணு கூடி, அப்புறப்படுத்தியிருப்போம். ஆனா, அரசமரமா போயிடுச்சே. அதுல அருவாபடக்கூடாதே. அதான் அப்படியே விட்டுட்டோம். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்தான் இதைச் செய்யணும். நாங்களும்  எத்தனையோ முறை சொல்லிப் பார்த்துட்டோம்" என்கிறார்கள்  நடுப்பட்டி மக்கள்.

இதுபற்றி அந்த ஊரில் வசிக்கும் சின்னப்பிள்ளை பாட்டியிடம் பேசியபோது, 'அரசமரத்தை பிள்ளை இல்லாத புருஷன் பொண்டாட்டி கருக்கலோட எழுந்து குளிச்சு முழுகி, ரெண்டு மண்டலம் அரசமரத்தைச் சுத்தி வந்தா, பிள்ளைப் பிறக்கும்ங்கிறது, காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை. பிள்ளை வரம் தரும் அரசமரத்தை வெட்டக்கூடாது' என்று தங்களது தொன்றுத்தொட்டுவரும் நம்பிக்கையை விளக்கினார். மேலும், "ஆனா, அந்த நம்பிக்கையெல்லாம் இல்லாத  அரசாங்க அதிகாரிங்க, இனிமேயாச்சும் இந்த மரத்தை அப்புறப்படுத்தட்டும்" என்றார்.