வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (29/11/2017)

கடைசி தொடர்பு:10:52 (29/11/2017)

`பணிநீக்கம் செய்யப்படுவீர்கள்!’ - எச்சரிக்கும் அரசு, அசராத செவிலியர்கள்

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்களுக்கு எச்சரிக்கைவிடுத்து பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

nurses protest
 

மாநில சுகாதாரத் துறை, கடந்த 2012-ம் ஆண்டு போட்டித் தேர்வு வாயிலாக 11,000 செவிலியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்தியது. இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்துவிடுவதாக அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாதச் சம்பளமாக 7,000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை. இதனால், செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த இரண்டு நாள்களாக 3,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.  

contract nurses protest
 

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ’செவிலியர்களின் 90 சதவிகித கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய காலஅவகாசம் தேவைப்படும்’ என்றார். 

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ‘நாளைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்குத் திரும்பாதவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர். சிலர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர். ஆனால் ஒருப்பிரிவினர், ‘எங்களின் கோரிக்கைகள்குறித்து அரசாணை வெளியிடப்படும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று கூறி போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை டி.எம்.எஸ் வளாகத்தில்  எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ’செவிலியர்கள் நடத்தும் போராட்டம் மருத்துவ சேவைகளைப் பாதிக்கிறது. எனவே, செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பலகை, ’மருத்துவம் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம்’ சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க