வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (29/11/2017)

கடைசி தொடர்பு:10:20 (29/11/2017)

பெங்களூரு விரைந்தார் தினகரன்: சசிகலாவுடன் முக்கிய ஆலோசனை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க தினகரன் சென்றுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக, தினகரன் பெங்களூரு விரைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.

தினகரன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. 'குடும்ப உறவுகளின் எதிர்ப்பை அடுத்து, போட்டியிடுவதுகுறித்து ஆலோசித்துவருகிறார் தினகரன். அவருக்குப் பதிலாக, கட்சி நிர்வாகிகளில் ஒருவரைப் போட்டியிட வைக்கும் வேலைகள் நடந்துவருகின்றன' என்கின்றனர் சசிகலா உறவுகள். முதலில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்திலேயே களம் இறங்கத் தயாராகிவந்தார் டி.டி.வி.தினகரன். 'தனிப்பட்ட செல்வாக்கை நிலைநிறுத்துவதற்குப் போட்டியிடுவதே சிறந்தது' என்பது அவரது பார்வையாக இருக்கிறது. ஆனால், ' தினகரன் போட்டியிடக் கூடாது' என குடும்ப உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர், சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த தினகரன் முடிவுசெய்துள்ளார். இதையடுத்து, இன்று திடீரென பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தினகரன் சென்றுள்ளார்.