கோவையைத் தொடர்ந்து கன்னியாகுமரி! - ஆளுநரின் அடுத்த அதிரடி

தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோஹித், டிசம்பர் மாதம் 7-ம் தேதி, கன்னியாகுமரியில் அரசு திட்டங்கள்குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இருக்கிறார். கடந்த 14-ம் தேதி, கோவையில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட கவர்னர், பின்னர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசின் திட்டங்கள்குறித்து ஆலோசனை நடத்தினார்.  இரண்டாவது நாளும் ஆலோசனை நடத்திய கவர்னர், தூய்மை திட்டப்பணிகளை ஆய்வுசெய்ததோடு, தூய்மைப் பணியிலும் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, தொழில் முனைவோர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் தன்னார்வலர்களோடு கலந்துரையாடினார்.

அப்போது, தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவதாக கவர்னர் தெரிவித்தார். இதுபோன்ற செயல்கள் நடைமுறையில் இல்லாத ஒன்று என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. ஆனால், கவர்னரின் ஆய்வை வரவேற்பதாக தமிழக அமைச்சர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், வரும் 6-ம் தேதி திருநெல்வேலி வரும் கவர்னர், அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், கன்னியாகுமரிக்கு வந்து அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 7-ம் தேதி காலை, பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதைத்தொடர்ந்து, விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். அதுபோல, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயிலிலும் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். அதன்பின், பகல் 11 மணி அளவில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அரசுத் திட்டங்கள்குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை, மாலை 4.30 மணி வரை நடைபெற இருக்கிறது. அதன்பின், மாலை 5. 20 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் சென்னைக்குப் புறப்படுகிறார். தமிழக கவர்னரின் கன்னியாகுமரி வருகையை ஒட்டி, மாவட்ட கலெக்டர் சஞ்ஞன் சிங் சவான்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கன்னியாகுமரியில் செய்யவேண்டிய பாதுகாப்பு, சாலை சீரமைப்பு உட்பட அனைத்துவித ஏற்பாடுகள்குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது. காவல்துறை, மருத்துவம், பொது சுகாதாரம், வருவாய்த் துறை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கவர்னர் கன்னியாகுமரிக்கு வந்து ஆய்வு செய்தால், அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என்று ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் அறிவித்திருக்கின்றன.

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!