வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (29/11/2017)

கடைசி தொடர்பு:11:05 (29/11/2017)

இன்றும் நாளையும் மிதமான மழை நீடிக்கும்! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

'இன்றும் நாளையும் மிதமான மழை நீடிக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளதால், தென் தமிழகத்தில் கனமழையும், வடதமிழகப் பகுதிகளில் மிதமான மழையும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும் என்ற போதிலும், கடந்த வாரம் வறண்ட வானிலையே நீடித்தது. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மீண்டும் பருவமழை தீவிரமடையத் தொடங்கியது. 

தற்போது, அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையால், சென்னை கடல்பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.