'இதுவும் மற்றொரு சிறைபோல் இருக்குமோ'- சேலத்தில் கேரள மாணவி ஹதியா வேதனை

உச்ச நீதிமன்றத்தில் சுதந்திரம் வேண்டும் எனக்கேட்ட நிலையில் இதுபோன்ற விடுதலையை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ள மாணவி ஹதியா, இதுவும் மற்றொரு சிறைபோல் இருக்குமோ எனத் தோன்றுகிறது என்று வேதனை தெரிவித்தார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் டி.வி.புரம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரி்ன் மகள் அகிலாவை ஷபின் ஜகான் என்பவர்  மதம் மாற்றித் திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, அகிலாவை ஹதியா எனப் பெயரிட்டு, இஸ்லாம் மதத்துக்கு மாற்றித் திருமணம் செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், இந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் அகிலாவின் தந்தை அசோகன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹதியாவின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று கூறியதோடு, அவரை நேரில் ஆஜர்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஹதியா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெற்றோருடன் வாழ விருப்பமில்லை என்று கூறிய ஹதியா, படிப்பைத் தொடர விரும்புவதாகவும் தன் கணவர் செலவிலேயே படிக்க விரும்புவதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிக்க ஹதியாவுக்கு அனுமதி அளித்ததோடு,  அந்தக் கல்லூரி டீனை அவருக்கு கார்டியனாக நியமித்து உத்தரவிட்டது. மேலும், சேலத்தில் படிக்கும்போது அவருக்கு தமிழக அரசு பாதுகாப்பளிக்க வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் வந்தார் மாணவி ஹதியா. சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவு இதுவரை கல்லூரிக்கு கிடைக்காததால் நிர்வாக நடவடிக்கை பற்றி தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சுதந்திரம் வேண்டும் எனக்கேட்ட நிலையில், இதுபோன்ற விடுதலையை எதிர்பார்க்கவில்லை. இதுவும் மற்றொரு சிறைபோல் இருக்குமோ எனத் தோன்றுகிறது. நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கூறுவது தவறு. எனது கணவரை சந்திக்க வேண்டும் என்பதே தற்போதைய ஆசை. எனது கணவரை இன்னும் என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. உச்ச நீதிமன்றம் அனுமதி தரும் என நம்புகிறேன்" என்றார்.

ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி தாளாளர் தெரிவிக்கையில், கல்லூரியில் பிற மாணவிகளைப்போலவே ஹதியாவும் நடத்தப்படுவார். ஹதியாவை சந்திக்க விரும்பும் உறவினர்கள் கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற வேண்டும்" என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!