வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (29/11/2017)

கடைசி தொடர்பு:12:00 (29/11/2017)

'நியூட்ரினோ திட்டத்தை விரைவுபடுத்துக' - தமிழக அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ளது அம்பரப்பர் மலை. இந்த மலை ஒரே பாறையால் ஆனது என்பதால், மத்திய அரசு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கத் திட்டமிட்டது. இந்நிலையில், டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன்பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் எந்த ஆய்வு மையமும் ஏற்படுத்தக் கூடாது எனப் போராட்டத்தில் இறங்கினர்.

ஆய்வு மையத்துக்கு எதிரான சில வழக்குகளும் தொடுக்கப்பட்டது. ஆய்வுப் பணியை நிறுத்தியது மத்திய அரசு. இந்நிலையில் மத்திய அமைச்சரவை செயலர் கே.பி.சின்ஹாவுக்குப் பிரதமர் மோடி, நாட்டில் சிக்கல்களுக்கு உள்ளான அனைத்து அறிவியல் திட்டங்களையும் விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டிருக்கிறார். அதே நேரம், பிரதமர் மோடி, பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டம் தொடர்பாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற்று திட்டத்தைத் துரிதப்படுத்த தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நியூட்ரினோ ஆய்வு மையமானது, மலையின் உச்சியிலிருந்து 1.3 கி.மீ கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். அங்கே நியூட்ரினோ கண்டறியும் டிடெக்டர்கள் பொருத்தப்படும். பின்னர், வான்வெளியிலிருந்து வரும் கண்களுக்குப் புலப்படாத நியூட்ரினோ கதிர்கள் கண்டறியப்பட்டு ஆய்வு நடைபெறும். இந்த ஆய்வுக்கூடம் அமைப்பதால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், அதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். திட்டத்தைத் துரிதப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள சூழலில் அப்பகுதி மக்கள் மற்றும் தமிழக அரசின் அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.