வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (29/11/2017)

கடைசி தொடர்பு:12:35 (29/11/2017)

“உங்க பசங்க தோல்வியடைஞ்சா சந்தோஷப்படுங்க” தன்னம்பிக்கைப் பேச்சாளர் சியாமளா!

"பள்ளிப் பருவத்திலிருந்தே பேச்சுப் போட்டி, பட்டிமன்றம் என என்னை ஆர்வமா ஈடுபடுத்திப்பேன். அந்த ஆர்வம்தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்களிடம் என்னைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கு'' - என்கிறார் சியாமளா. செய்தி வாசிப்பாளர், பள்ளி ஆசிரியை, பேச்சாளர் எனப் பன்முகம் இவருக்கு. கடந்த ஏழு வருடங்களாகப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை எண்ணங்களை விதைத்துக்கொண்டிருப்பவர். 

சியாமளா

''என்னோட பேச்சு ஆர்வம் ஒன்றாம் வகுப்பிலேயே தொடங்கிடுச்சு. முதல்முறையா ஸ்கூல் அசெம்பளியில் பேசினப்போ கிடைச்ச கைத்தட்டல் ஊக்கத்தைக் கொடுத்துச்சு. எல்லோருமே இப்படியான பாராட்டைக் கடந்துவந்திருப்போம். எனக்கு அந்தப் பாராட்டு உள்ளுக்குள்ளே ஒரு விதையா விழ ஆரம்பிச்சிடுச்சு. அடுத்தடுத்த நகர்வுகளில் அந்த விதை வளர்ந்து பல மேடைகள், பரிசுகள், பாராட்டுகள் என விருட்சமா மாறிச்சு. சென்னை கல்லூரியில் படிச்சுட்டிருக்கும்போது, என் தமிழ் உச்சரிப்பைப் பார்த்து, பொதிகை டி.வியில் பகுதி நேர செய்திவாசிப்பாளர் வாய்ப்பு கிடைச்சது. அதில் கிடைச்ச ஊதியம் என் படிப்புக்கு உதவியா இருந்துச்சு. அதோட, மொழி நடையை இன்னும் மெருகேத்திக்குற வாய்ப்பாகவும் அது அமைஞ்சது” என்கிற சியாமளா, தன்னம்பிக்கைப் பேச்சாளராக தன்னை மாற்றிக்கொண்டது பற்றி சொல்கிறார். 

''கல்லூரி படிப்பு முடிஞ்சதுமே திருமணம், குழந்தை என இரண்டு வருஷம் இடைவெளி. அப்புறம், அண்ணா நகரில் ஒரு தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ டீச்சரா சேர்ந்தேன். பருவ வயதில் இருக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பு. அந்தப் பிள்ளைகளுக்குப் படிப்பைவிடவும் முறையான வழிகாட்டல் அவசியம் என உணர்ந்தேன். அவங்க பாடத்தோடு வாழ்வியல் கருத்துகளையும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். அது மாணவர்களுக்கு ரொம்ப பிடிச்சது. 'டீச்சர் நீங்க அன்னைக்கு ஒரு சப்ஜெக்ட் நடத்துறப்போ ஒரு கருத்து சொன்னீங்களே... அது ரொம்ப இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு'னு சந்தோஷமா சொல்வாங்க. அப்புறம்தான் தன்னம்பிக்கை வகுப்புகளை எடுக்க முடிவுப் பண்ணினேன். 

மேடையில் சியாமளா

நான் வளர்ந்த காலத்தில் கூட்டுக் குடும்ப முறை. அப்பா, அம்மா பிஸியா இருந்தாலும், பாட்டியும் தாத்தாவும் அரவணைச்சாங்க. ஒரு பிரச்னை வந்தால், பயப்படாமல் மாமா அல்லது சித்தப்பாகிட்டே சொல்ல முடிஞ்சது. நமக்கு ஒண்ணுன்னா ஓடிவந்த உதவ நாலு பேர் இருக்கும் நம்பிக்கை. இப்போ, டெக்னாலஜி யுகம்னு சொல்லிக்கிட்டாலும் கூட்டப்புழுவா சுருங்கிக் கிடக்கிறோம். பெற்றோர் ஓடி ஓடி வேலை பார்க்கிறாங்க. குழந்தைகளுக்குத் தேவையானதை கொடுத்துட்டா போதும்னு மட்டுமே நினைக்கிறாங்க. அங்கேதான் பெரிய அடி விழுது. வேலைக்குப் போயிட்டு வரும் பெற்றோர் அசதியில் பிள்ளைகளிடம் பேசுறதுகூட கிடையாது. முறையான அட்வைஸ் இல்லை. அவங்களை சரியா வழிநடத்த மறந்திடுறோம். 

'நாம சொல்ல வந்ததை அப்பா, அம்மாவே கேட்காதபோது யார்கிட்ட சொல்றது'னு குழந்தைகள் குழம்பறாங்க. வெளியில் கிடைக்கும் நட்பில் பேசறாங்க. அது கூடா நட்பாக இருந்துட்டால் பிரச்னை ஆகுது. ஆக தப்பை நம்மிடம் வெச்சுட்டு, குழந்தை தவறான வழியில் போகறதா பரிதவிக்கிறோம். 'அய்யோ... அந்தப் பையன் நல்ல மார்க் வாங்கிருக்கானே, நம்ம பையன் ஏன் படிக்க மாட்டேங்கிறான். அவங்க என்ன சொல்லுவாங்க, இவங்க என்ன சொல்வாங்க'னு பதறுறோம். நம் பதற்றம் குழந்தைகளை இன்னும் குழப்புது. நாம தப்பு பண்ணிட்டோம்; தோத்துட்டோம்னு நினைக்கிறாங்க. அதைச் சமாளிக்க முடியாம திணறுறாங்க. அந்த நேரத்தில் அவங்களுக்கு நாமதானே பக்கபலமா இருக்கணும்? முதல்ல உங்க பசங்க படிப்புலயோ இல்ல விளையாட்டுலயோ தோத்துட்டா நீங்க சந்தோஷப்படுங்க. ஏன்னா, ஒரு பல்லு விழுந்தா, இன்னொரு பல்லு முளைக்கும். தோல்வியில இருந்ததான் வெற்றி கிடைக்கும்னு அவங்களுக்குத் தானாவே புரியும். அதைவிட்டு இப்புடி தோத்துட்டியேன்னு அவங்க முன்னாடி புலம்பக்கூடாது. அதோட, நம்ம ஆசைக்கு ஏற்ப அவங்களை மாற்ற நினைக்குறதும் தப்பு. அது சரியில்லே, இது சரியில்லேன்னு நம்ம இஷ்டத்துக்கு மாத்துறதுக்கு, குழந்தைகள் ஒண்ணும் வாஸ்து இல்லை. அவங்களுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கு. அதனால, அவங்களையும் பொத்திப் பொத்தி வளர்க்காம கொஞ்சமாவது சுதந்திரம் கொடுங்க.  பாதுகாப்போடு சேர்த்து தைரியத்தையும் கத்துக்கொடுங்க. 

பேச்சாளர் சியாமளா

என் பையன் சுதேஷ் ஆதித்யா. என் கணவரின் ஆசைக்காக இன்ஜினீயரிங் படிச்சான். கல்லூரியில் சேர்ந்த நாலு மாசத்திலேயே 'அப்பா, நீங்க சொன்னீங்கன்னு இன்ஜினீயரிங் எடுத்தேன். ஆனால், என்னோட ஃபீல்டு இது இல்லைன்னு உணரமுடியுது. நான் ஒரு வருஷம் பிரேக் எடுத்துட்டு, ஆர்ட்ஸ் சேரலாம்னு இருக்கேன்'னு சொன்னான். அவன் முடிவை சந்தோஷமா ஆதரிச்சோம். இப்போ டிப்பார்ட்மென்ட்லேயே அவன்தான் டாப்பர். நாங்க அவன் மேல எதிர்பார்ப்பை திணிக்கலை. அவன் விருப்பத்துக்கு விட்டோம். அதனால், புடிச்ச துறையில் முதல் மாணவனா வந்திருக்கான். எல்லா மாணவர்களும் இப்படித்தான். தயவுசெய்து உங்க விருப்பங்களைப் பிள்ளைகள் மேலே திணிக்காதீங்க” என்கிற சியாமளா, தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்