வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (29/11/2017)

கடைசி தொடர்பு:11:20 (15/02/2018)

"எனக்கு ஆபாச அழைப்புகள் விடுக்கும் நபர்களுக்கு தன் வீட்டுப் பெண்கள் நலனில் அக்கறையிருக்குமா?!" தமிழிசை செளந்தரராஜன் #SpeakUp #உடைத்துப்பேசுவோம்

தமிழிசை செளந்தரராஜன்

"ஒருத்தரின் செயலாற்றல் மற்றும் கருத்துக்கு எதிர்க் கருத்தினால் பதில் சொல்லாமல், தோற்றத்தைக் கிண்டல் பண்றது சரியானதா? அப்படி வக்கிரப் புத்தியுடன் கிண்டல் பண்றவங்க தங்கள் குடும்பப் பெண்களை நினைச்சுப் பார்ப்பாங்களா? ஒருமுறைக்குப் பலமுறை முதலில் யோசிச்சுப்பாருங்கள். அதுக்குப் பிறகும் செய்யறது சரினு தோணிச்சுன்னா, தாராளமா என்னை தரக்குறைவாகப் பேசுங்க" - ஆவேசத்துடன் பேசுகிறார், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். 

பிரபல அரசியல் தலைவரின் மகள்; மருத்துவர்; மருத்துவரின் மனைவி; ஓர் அரசியல் கட்சித் தலைவர் எனப் பல அடையாளங்கள்; உழைப்பினால் கிடைத்த அங்கீகாரம் எனப் பயணித்தாலும், தன் தோற்றத்தால் தமிழிசை எதிர்கொண்ட, எதிர்கொண்டிருக்கும் விமர்சனங்கள் அளவில்லாதவை. 

"என் நிலையில் ஓர் ஆண் இருந்தால் இப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசுவார்களா? பெண் என்பதால்தானே இவ்வளவு இளக்காரம். இது என்னை மட்டும் பாதித்தால்கூட சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற இடர்பாடுகள் வரும்தான் என இருந்துடலாம். ஆனால், என்னைவிட என் குடும்பத்தாரின் நிம்மதியை அதிகம் பாதிக்குது. அதுதான் மனவலியை அதிகமாக்குது" என்று ஆதங்கத்துடன் சொன்னாலும், இடையிடையே புன்னகையும் சிந்துகிறார் தமிழிசை செளந்தரராஜன். சிறு வயது முதல் தான் எதிர்கொண்ட நிறம் மற்றும் தோற்றம் குறித்த சீண்டல்களைச் சொல்கிறார். 

தமிழிசை

"நான் கறுப்பு நிறம். தலைமுடி சுருள் தன்மைகொண்டது. என் அப்பா குமரி அனந்தன், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பதால், குழந்தைப் பருவத்திலிருந்தே மீடியா வெளிச்சம் என்மீது இருந்துள்ளது. அப்போதெல்லாம் சமூகத்திலிருந்து என் தோற்றம் பற்றி எந்த விமர்சனமும் வந்ததில்லை. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரியில் சக மாணவர்கள் தோற்றத்தைக் கிண்டல் செய்திருக்காங்க. வருத்தமாக இருக்கும். படிப்பு, இலக்கியம், அப்பாவுக்கு அரசியல் உதவி என ஓய்வில்லாம நேரத்தைச் செலவழிச்சேன். அதனால், மற்றவர்கள் கிண்டலுக்குப் பெருசா ரியாக்‌ஷன் பண்ண மாட்டேன். சில சமயங்களில் கிண்டல் அதிகமாகும்போது, அம்மாகிட்ட சொல்லி வருத்தப்படுவேன். 'உன் சுருட்டை முடிதான் உன் அழகு. அது புரியாமல் கிண்டல் பண்றவங்களை நீ கண்டுக்காதே'னு சமாதானப்படுத்துவாங்க. 

மருத்துவர் பணியில் சிறப்பா செயல்படணும் உறுதியா இருந்தேன். சென்னை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ் படிப்பைப் படிச்சேன். 'ஃபீட்டல் தெரப்பி' (Fetal therapy) என்கிற, கருவிலேயே குறைபாடுகளைக் கண்டறிந்து குழந்தையைக் குணப்படுத்தும் ஸ்கேன் சர்ஜரி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் கோர்ஸை கனடாவில் முடிச்சேன். பேராசிரியராகவும், 'ஸ்கேன் ஸ்பெஷலிஸ்ட்' மருத்துவராகச் சென்னையின் பல மருத்துவமனைகளில் வொர்க் பண்ணினேன். ஒருகட்டத்தில், அரசியல்மூலம் மக்களுக்குக் கூடுதலா சேவை செய்ய முடியும்னு நினைச்சேன். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிவந்த மருத்துவர் பணியை படிப்படியே விட்டுட்டு முழு நேரமா அரசியலுக்கு வந்துட்டேன். அதேசமயம், வசைக் கருத்துகளும் படிப்படியே உயர்ந்து உச்சத்தை சந்திச்சுட்டிருக்கேன். இதெல்லாம் எதனால்?" என்று கேட்டு நிறுத்துபவர், பதிலையும் சொல்கிறார். 

தமிழிசை

"ஓர் அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் என்கிற முறையில் ஒரு விஷயத்தில் என் கருத்தைச் சொல்றேன். அதுக்கு யார் வேணாலும் மாற்றுக் கருத்தைச் சொல்லலாம். அது சரியாக இருந்தால், நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். அது ஆரோக்கியமானதாக இருக்கணும். யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தாமல் இருக்கணும். ஆனால், 'இவரை பணி செய்ய விடக்கூடாது; கருத்தைப் பகிற விடக்கூடாது'னு என் மனம் புண்படும்படியான வார்த்தைகளால் திட்டமிட்டே பேசுறாங்க. நான் தவறான கருத்தையே சொல்லியிருந்தாலும், அதுக்கு ஆக்கபூர்வமான எதிர்க்கருத்தைச் சொல்வதுதானே நியாயம். 'நீ தலை சீவ பல மணி நேரமாகும்; முடியை ஸ்ரெய்ட்னிங் பண்ணிக்கோ, கறுப்பு, பரட்டை'னு தோற்றத்தைச் சீண்டுவது எந்த வகையில் சரி? குடும்பத்தாரிடம்கூட சொல்லமுடியாத அளவுக்கு நள்ளிரவில் போன் பண்ணி ஆபாசமாகப் பேசறாங்க. தங்கள் குடும்பத்துப் பெண்களை வேறு ஒருவர் தகாத வார்த்தைகளாலும், தோற்றத்தையும் கிண்டல் பண்ணினா உங்க நிலைப்பாடு எப்படி இருக்கும்? தன் விட்டுப் பெண்கள் நலனில் அக்கறையிருக்கும் நபர்கள், நள்ளிரவில் போன் பண்ணி என்னிடம் ஆபாசமாகப் பேசுவார்களா? அப்படிப் பேசியவர்கள் தங்களை மனதளவில் நீங்களே கேட்டுக்கங்க. 

 

 

அரசியல் பணிக்கு வந்த ஆரம்பக்காலங்களில் என் மீதான தாக்குதல்கள் அதிகம் நடக்கலை. சோஷியல் மீடியாவின் வளர்ச்சியினால் பெரிய அளவில் என்னை சீண்டிப் பேசிட்டிருக்காங்க. தொழில்நுட்ப வளர்ச்சியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தறதை விட்டுட்டு, என்னைத் தாக்கிப் பேசி பெருசா எதை சாதிக்கப்போறீங்க? அது உங்க மன அழுக்கைதான் வெளிச்சமிட்டுக் காட்டுது. என்மீதான தாக்குதல்களுக்கு எதிர்வினை ஆற்றினால் அது என் தன்னம்பிக்கையையும் வளர்ச்சியையும் குறைச்சுடும்னு எதையும் பெருசுப்படுத்தறதில்லை. ஆனால், அதை அவங்களுக்கு கிடைச்ச வெற்றியா நினைச்சுக்கறாங்க. இதையெல்லாம் பார்த்து என் நலனில் அக்கறைக்கொண்ட கணவர், மகன், மகள், மருமகள் உள்ளிட்டோர் ரொம்பவே கலவைப்படுறாங்க" என்கிற தமிழிசை, இறுதியாகவும் அழுத்தமாகவும் சொல்வது...  

"அரசியல் துறையில் இருக்கும் பெண்ணையே மிகவும் தகாத முறையில் பேசுபவர்கள், சமூகத்தின் சாதாரணப் பெண்களை எவ்வளவு கேவலமாகப் பேசுவாங்க என நினைக்கும்போது எனக்கு கவலை அதிகமாகுது. நேர்மையானவங்க என்னைக் கருத்துக் களத்தில் சந்திப்பாங்க. கோழைகள்தான், 'பெண் என்பதால் இவளை எபப்டியும் இழிவுபடுத்தலாம்'னு நினைப்பாங்க. என் அரசியல் பணியை குறைசொல்ல முடியாமல், தோற்றத்தை ஒப்பிட்டுக் குறைசொல்றாங்க. இதுக்காக வருந்தி, எந்த ஒரு நொடியையும் வீணடிக்கமாட்டேன்!" 

ஐந்தில் நான்கு இந்தியப் பெண்கள் (79%), பொது இடங்களில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்கிறது சென்ற வருட ஆய்வு ஒன்று. 70% இந்தியப் பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் பற்றி புகார் அளிப்பதில்லை என்கிறது, இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று. 2007-ல் இந்திய அரசு ஐ.நாவுடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில், 53% குழந்தைகள் sexual abuse victim-களாக இருந்தது தெரியவந்தது. எனில், இந்த எண்கள் எல்லாம் யாரோ அல்ல, நாம்தான். இப்படி திக்கெங்கும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டாலும், அவற்றைப் பேசாமல் மறைத்த, பேசத் தயங்கிய பெண்களின் தலைமுறைகள் முடியட்டும். 'பேசி என்ன ஆகப்போகிறது?' என்கிறீர்களா? இதுவரை குற்றவாளிகளுக்கு அரணாக இருந்துவந்ததே அந்த எண்ணம்தானே? முதலில் அதைத் தகர்ப்போம். அதற்காகவே இந்தத் தளம். அதற்கு மட்டும்தானா? இல்லை. மனநல கவுன்சலிங் முதல் சட்டரீதியான நடவடிக்கைகள்வரை தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும். தன்னால் சக மனுஷிக்கு நேர்ந்த பாலியல் சீண்டலுக்கு வருந்தித் திருந்தும் ஆண்களின் மனமாற்றங்களையும் வரவேற்கிறோம்.  

பாலியல் குற்றங்களைப் பொசுக்கும் இந்த சிறு பொறியை பெரும் அக்னி பிரளயமாக மாற்றும் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். #SpeakUp என உடைத்துப் பேசுங்கள்!


டிரெண்டிங் @ விகடன்