வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (29/11/2017)

கடைசி தொடர்பு:11:35 (29/11/2017)

'அனைத்து மணல்குவாரிகளையும் மூட வேண்டும்'- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மணல் குவாரிகளுக்கு எதிராகப் போராடி வரும் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாட்டிலிருந்து முறையாக இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய விடாமல் தமிழக அரசு சில முட்டுக்கட்டைகள் போட்டு வந்தது. இது தமிழகத்தில் நடைபெறும் ஆற்று மணல் விற்பனையை ஆதரிப்பது போலிருந்த நிலையில், மணலை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனத்தினர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பில்தான் மனுதாரர், 'மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை, கட்டுமானப்பணிகளுக்கு இறக்குமதி செய்து மணலை பயன்படுத்திக்கொள்ளலாம் ' என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ''விதிகளை மீறி, நிலத்தடி நீரைக் கெடுத்து, இயற்கையை சூறையாடும் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும், புதிய மணல் குவாரிகள் திறக்கக் கூடாது, இன்னும் ஆறு மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும்' என்று அதிரடியாக உத்தரவிட்டது. காவிரி ஆற்றுப் படுகையில் புதிதாக  70 மணல் குவாரிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசின் முயற்சிக்கு இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க