வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (29/11/2017)

கடைசி தொடர்பு:12:20 (29/11/2017)

''அகிலா என்ற பெயரிலேயே படிப்பைத் தொடருவார் ஹதியா!'' - கல்லூரி டீன்

சேலம் சிவராஜ் ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்து மீண்டும் படிப்பைத் தொடர்கிறார் ஹதியா. ஹோமியோபதி மருத்துவருக்கான படிப்பை முடித்துவிட்டாலும் 11 மாதங்கள் கல்லூரி விடுதியில் தங்கி இன்டர்ன்ஷிப் பயிற்சி மேற்கொள்கிறார் அவர். 

சேலம் வந்த ஹதியா

மதம் மாறி திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படும் அகிலா என்ற ஹதியா உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு நேற்று  விமானத்தில் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து போலீஸ் வேனில் சேலம் அழைத்து வரப்பட்டார். சிவராஜ் கல்லூரியில் அவரை ஆசிரியர்களும் மாணவ- மாணவிகளும் வரவேற்றனர். ஹதியா சேலத்துக்கு அழைத்து வரப்படுவதை அறிந்த சில அமைப்பினர், கல்லுரி வாசலில் நின்று கோஷம் எழுப்பினர். போலீஸார் அவர்களை துரத்தினர். 

''நாங்கள் அகிலாவை எங்கள் மாணவியாகவே பார்க்கிறோம்; எந்த வித்தியாசமும் எங்களிடம் இல்லை'' என்று ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர். சிவராஜ் ஹோமியோபதி கல்லூரியின் நிர்வாக இயக்குநர் கல்பனா சிவராஜ் கூறுகையில், '' 2015-ம் ஆண்டு அகிலாவுக்கு தனிப்பட்ட சில பிரச்னைகள் இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் கல்லூரியில் அவர் மீண்டும் படிப்பைத் தொடர அனுமதிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சேலம் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஹதியாவின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன'' என்றார். 

ஹதியாவின் கார்டியனாக நியமிக்கப்பட்ட சிவராஜ் ஹோமியோபதி கல்லூரியின் டீன் டாக்டர். கண்ணன் கூறுகையில் , ''அகிலா அசோகன் என்ற பெயரில்தான் அவர் படிப்பில் சேர்ந்தார். அதே பெயரில்தான் படிப்பைத் தொடருவார். அவருக்கு எந்த சிறப்பு வசதிகளும் செய்து தரப்படாது'' என தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய ஹதியா, ''கடந்த 6 மாதங்களாக பெற்றோருடன்தான் இருந்தேன். இனி, என் கணவரைச் சந்திக்க விரும்புகிறேன். சேலம் வந்ததும் அவருக்குப் போன் செய்தேன். போன் ரீச் ஆகவில்லை. மீண்டும் போன் செய்வேன்'' என்றார். 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, படிப்பு முடியும் வரை ஹதியா கணவர் ஜபின் ஜஹானை சந்திக்க முடியாது . கார்டியன், பதிவாளர்,  உறவினர்களை மட்டுமே சந்திக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. 

அகிலாவின் தந்தை அசோகன், ''தன் மகளை திட்டமிட்டு, அவள் மனதை மாற்றி மதமாற்றம் செய்துவிட்டனர். சிரியாவுக்கு அழைத்துச் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்கவும் திட்டமிட்டிருந்தனர். உச்ச நீதிமன்ற நடவடிக்கையால் என் வீட்டில் இருந்து பயங்கரவாதி உருவாவது தடுக்கப்பட்டுள்ளது'' என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க