வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (29/11/2017)

கடைசி தொடர்பு:12:40 (29/11/2017)

செவிலியர்களை பாலியல்ரீதியாக மிரட்டுவதா? விஜயபாஸ்கரை சீறும் ராமதாஸ்

'உரிமைகளைக் கேட்டு போராடும் செவிலியர்களைப் பாலியல்ரீதியாக மிரட்டும் அவலம் இப்போதுதான் அரங்கேற்றப்படுகிறது' என்று வேதனை தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், விஜயபாஸ்கரை சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ramadoss

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மேற்கொண்டுவரும் உள்ளிருப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்கவையாக உள்ளன. பெண்கள் என்றும் பாராமல் செவிலியர்களைப் பலவேறு வழிகளில் மிரட்டுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, கடந்த 2015-ம் ஆண்டு 11 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின்மூலம் முறையாக விண்ணப்பம் பெறப்பட்டு, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில்தான் தேர்வுசெய்யப்பட்டனர். காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களைவிட அதிக நேரம் பணியாற்றும்படியும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கி, சொந்த மாவட்டங்களுக்கோ, அருகில் உள்ள மாவட்டங்களுக்கோ இடமாற்றம்செய்யக் கோரி, கடந்த ஒன்றாம் தேதி முதல் 7-ம் தேதி வரை கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றினார்கள். தங்களின் கோரிக்கைகள்குறித்து, தங்களை அழைத்து தமிழக ஆட்சியாளர்கள் பேச்சு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்தனர். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க அரசு முன்வராத நிலையில், சென்னை மருத்துவ சேவை இயக்குநரக வளாகத்தில் 27-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அவர்களின் கோரிக்கைகள்குறித்து பேச்சு நடத்தி உடன்பாடு கண்டு, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவைப்பதுதான் சிறந்த அணுகுமுறையாக இருக்கும். ஆனால்,  சுகாதார அமைச்சரும், அவருக்குத் துதிபாடும் இயக்குநர்கள், நிலை அதிகாரிகள் சிலரும் காவல்துறையினரின் உதவியுடன் குண்டர்களைப்போல செயல்பட்டு, செவிலியர்களை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.3000-க்கும் மேற்பட்ட பெண் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த வளாகத்திலுள்ள கழிவறைகள் அனைத்தையும் அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் அவதிக்குள்ளானார்கள்.

செவிவியர்களுடன் பேச்சு நடத்துவதற்காக வந்த சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவு இயக்குநர்கள்,  செவிலியர்களின் கோரிக்கைகளை கேட்பதற்குப் பதிலாக, ‘உங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்’ என்று மிரட்டல்களில்தான் ஈடுபட்டனர். அதிகாரிகள் ஒருபுறம் மிரட்டல் விடுத்துவந்த நிலையில், மற்றொருபுறம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களை அழைத்து செவிலியரின் உணர்வுகளை மதிப்பது போலவும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்கத்தயாராக இருப்பதுபோலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி, போராட்டம் நடத்திக்கொண்டிருந்த செவிலியர்களில் ஒரு பிரிவுடன் பேச்சு நடத்துவதாகக் கூறி, அவர்களை மூளைச்சலவை செய்தார். அதனால், சுமார் 100 பேர் மட்டும் போராட்டக் களத்திலிருந்து வெளியேறிய நிலையில், மீதமுள்ளோருக்கு அடக்குமுறை அதிகரித்தது.  ஒரு கட்டத்தில் இந்த அடக்குமுறை, நாகரிகத்தின் எல்லைகளைக் கடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டுவந்த செவிலியர்களுக்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த பெண் காவலர்களை நேற்றிரவு திரும்பப்பெற்ற அதிகாரிகள், அவர்களுக்குப் பதிலாக ஆண் காவலர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்தினர். அவர்கள், பெண் செவிலியர்களிடம் சென்று,‘‘ இரவு நேரமாக இருக்கிறது... எல்லோரும் பெண்களாக இருக்கிறீர்கள், அப்புறம் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று மிரட்டல் விடுத்தனர். இதன் பொருள் என்ன? என்பதைப் பொது அறிவுள்ள அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி என்றாலும், அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் போராட்டங்களை முறியடிக்க  சட்டவிரோத வழிகளைக் கட்டவிழ்த்துவிடுவது வாடிக்கை தான். பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள்,  நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடியபோது, அவர்களைக் கைதுசெய்து மதுராந்தகத்துக்கு அப்பால், சுடுகாட்டில் நள்ளிரவில் இறக்கிவிட்டு வந்த பெருமைகூட தமிழகக் காவல்துறைக்கு உண்டு. 

ஆனால், உரிமைகளைக் கேட்டுப் போராடும் செவிலியர்களைப் பாலியல்ரீதியாக மிரட்டும் அவலம் இப்போதுதான் அரங்கேற்றப்படுகிறது. இதைவிட கேவலமான, அருவருக்கத்தக்க அணுகுமுறை எதுவும் இருக்க முடியாது. இத்தகைய அணுகுமுறைக்காக, ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். செவிலியர்களுக்கு அச்சுறுத்தல் இன்றும் தொடர்கிறது. உடனடியாக பணிக்குத் திரும்பாத செவிலியர்கள், பணி நீக்கம் செய்யப்படுவர் என்று எச்சரித்துள்ள ஆட்சியாளர்கள், அதற்கான அறிவிக்கைகளைப் போராட்டம் நடக்கும் இடத்தில் ஒட்டி, அச்சத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் மாதம் ரூ.7700 ஊதியம் வாங்கும் சாதாரணப்  பணியாளர்கள். பலரது வீடுகளில் இந்தக் குறைந்த வருவாயை நம்பித்தான் குடும்பம் நடக்கிறது. அடிப்படை வசதிகளைத் துண்டித்தும், பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தும், செவிலியர்களின் மன உறுதியைக் குலைக்க முயன்ற ஆட்சியாளர்கள், இறுதியாக பணிநீக்கம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

சுகாதாரத்துறை என்பது மக்கள் நலன் காக்கும் துறையாகும். அதற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர், பண்பட்டவராக இருக்க வேண்டும். இப்போது இருப்பவர் அப்படிப்பட்டவராகத் தோன்றவில்லை. சுகாதாரச்  சேவைகளை வழங்குவதைவிட குட்கா விற்பனையில்தான் தேர்ந்தவராக உள்ளார். சமூகநீதியைப்  படுகொலைசெய்துவிட்டு இட ஒதுக்கீடு இல்லாமல், கையூட்டு வாங்கிக்கொண்டு மருத்துவர்களை நியமிப்பது, உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் ஆணையிட்ட பிறகும் செவிலியர்களுக்கு பணி நிலைப்பு வழங்காமல் மிரட்டுதல் போன்றவை அமைச்சருக்குரிய தகுதிகள் அல்ல. எனவே, விஜயபாஸ்கரை சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்"  என்று வலியுறுத்தியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க