வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (29/11/2017)

கடைசி தொடர்பு:13:00 (29/11/2017)

ராமேஸ்வரம் தீவில் பருவமழை தீவிரம்! சூறாவளியில் சிக்கியது படகுகள்

வடகிழக்குப் பருவ மழையின் தாக்கத்தால், ராமேஸ்வரம் மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. மேலும், சூறாவளிக் காற்றினால் கடலில் நிறுத்தியிருந்த சில படகுகள் கட்டுப்பாட்டை இழந்து கரையில் அடைந்தன.

ராமேஸ்வரம் தீவுப் பகுதியில், கடந்த 3 நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்துவருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் ராமேஸ்வரத்தில் 22.35 செ.மீ., தங்கச்சிமடத்தில் 15 செ.மீ. மற்றும் பாம்பனில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதில் ராமேஸ்வரத்தில் மட்டும் ஒரே நாளில் அதிக அளவாக 14 செ.மீ மழை பெய்தது. இந்த மழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசிவருகிறது.

ராமேஸ்வரம் கடற்கரையில் சூறாவளியில் சிக்கி தரை தட்டிய படகுகள்

தொடர் மழையின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயர்ந்ததால், சேரான்கோட்டை மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது. இதே தங்கச்சிமடம் சூசையப்பட்டினம் பகுதியிலும் கடல்நீர் பாய்ந்து, கரையோரங்களில் உள்ள மீனவர் குடியிருப்புகளைச் சேதப்படுத்தியுள்ளது. இதேபோல, ராமேஸ்வரம் கரையூர் மற்றும் ராமர்தீர்த்தம் நெடுஞ்சாலை, தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர் நகர், அப்துல் கலாம் நினைவிடத்தின் முன் பகுதி எனப் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர்

மழையுடன் சேர்ந்து வீசிய சூறாவளிக் காற்றின் வேகத்தினால், ராமேஸ்வரம் துறைமுகப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள், நங்கூரங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கரையோரங்களில் ஒதுங்கின. மீனவர்கள் அவற்றை மீண்டும் கடல் பகுதிக்குக் கொண்டுசெல்லும் வேலைகளில் ஈடுபட்டனர்.  இலங்கைக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால், மேலும் சில நாள்களுக்கு ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையத்தினர் அறிவித்துள்ளனர்.