'இனிமேலும் தினகரனை நம்பி பயனில்லை!' -   அணிமாறும் முடிவில் 13 எம்.எல்.ஏ-க்கள்  

பன்னீர்செல்வம், பழனிசாமி

தினகரனை ஆதரித்த 5 எம்.பி-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளனர். அடுத்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏ-க்களும் முதல்வரை சந்திக்கும் முடிவில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அ.தி.மு.க-வில் அணிகள் மாறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. உள்கட்சிப் பூசலால் உருவான அணிகளை ஒன்றிணைக்கும் வேலையில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். தினகரன் அணியிலிருந்த  5 எம்.பி-க்கள் தங்கள் பக்கம் வந்துள்ளதையடுத்து, அவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அ.தி.மு.க-வின் உள்கட்சி பூசலுக்கு தீர்வு கண்டால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்ற முடிவில் உள்ளனர். இதுதொடர்பாக ,அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து, அணிகளை உருவாக்கிய முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.

 அ.தி.மு.க வேட்பாளர் தேர்வால் மீண்டும் பிரச்னை ஏற்படக்கூடாது என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கவனமாக உள்ளனர். மதுசூதனனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக்கூடாது என்பதில் பழனிசாமி தரப்பில் சிலர் வலியுறுத்தியுள்ளனர். இதனால்தான் 27 பேர் விருப்ப மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர். மதுசூதனனுக்கு எதிராக வேட்பு மனு தாக்கல்செய்தவர்களிடம் பன்னீர்செல்வம் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதில், கட்சியில் முக்கிய பதவியிலிருக்கும் நிர்வாகி ஒருவர், கண்டிப்பாக எனக்கு சீட் வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லியிருக்கிறார். அவரை எப்படி சமரசப்படுத்தலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒரணியில் திரள்வதை உன்னிப்பாக பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் கவனித்துவருகின்றனர். இதற்கிடையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்குறித்து முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு மாநில உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையும் அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், உள்கட்சி பூசலுக்கு முடிவுகட்டும் வேலையில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு கட்சியில் முக்கியப்பதவி, அமைச்சரவையில் இடம், வாரியப் பதவி என வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சசிகலா

இதற்கிடையில், சசிகலா அணியிலிருந்த 5 எம்.பி-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் 5 பேரைத்தவிர 13 பேர் விரைவில் முதல்வர் எடப்பாடியைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் மூத்த அமைச்சர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். அப்போது சில எம்.எல்.ஏக்கள், 'தினகரனை நம்பி இனி எந்தப் பயனுமில்லை. தவறுசெய்துவிட்டோம். எங்களுடைய எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்ற வாக்குறுதி கொடுத்தால், உடனே முதல்வரைச் சந்திக்கிறோம்' என்று அமைச்சரிடம் வெளிப்படையாகச் சொல்லியுள்ளனர். அந்தத் தகவல், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் சிக்னல் அடிப்படையில், விரைவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் சந்திப்பு நடக்கும் என்று உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம். "இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. இதனால், கட்சியும் ஆட்சியும் அவர்களிடம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் சசிகலா, தினகரனை நம்பி இனியும் காத்திருந்தால் எந்தப் பயனுமில்லை. அவரை நம்பி சென்றதால், எங்களுடைய எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிபோனதுதான் மிச்சம். நீதிமன்றத்தில் நடந்துவரும் எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்பட்சத்தில், அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்ற உறுதிமொழியைக் கேட்டுள்ளோம். அதற்கு கிரீன் சிக்னல் கிடைத்தவுடன், முதல்வரை சந்திக்கும் முடிவில்தான் 13 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். 5 எம்.எல்.ஏ-க்கள் தினகரனின் தீவிர விசுவாசிகள். அவர்களில் சிலர், அமைச்சர் பதவி என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். அந்தப் பதவி வழங்கப்படுவதாக முதல்வர், துணை முதல்வர் தரப்பினர் உறுதியளித்தால், அவர்களும் முகாம் மாறிவிடுவார்கள்" என்றனர். 

 அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அ.தி.மு.க ராணுவக்கட்டுப்பாடோடு செயல்பட்டது. தற்போது, நிலைமை மாறிவிட்டது. அ.தி.மு.க-வில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும்கூட கருத்துவேறுபாடு இருக்கிறது. அது, களையப்பட வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் கட்டாயத்தில் இருக்கிறோம். பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனனை வேட்பாளராக அறிவிக்கக்கூடாது என்ற பழனிசாமி அணியைச் சேர்ந்த சிலர் வலியுறுத்தியதோடு, அவருக்குப்போட்டியாக கட்சியினர் விருப்ப மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளரைத் தேர்வுசெய்யும் ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு கட்சியினர் கட்டுப்பட வேண்டும். அ.தி.மு.க-வை எதிர்க்க எதிர்கட்சிகள் ஓரணியில் திரள்கின்றனர். இதனால், இந்தத் தேர்தலில் ஒற்றுமையாகச் செயல்பட்டால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. அதுதொடர்பாக சமரச பேச்சவார்த்தை நடந்துவருகிறது. தினகரன் அணியிலிருப்பவர்கள் விரைவில் எங்களிடம் வந்துவிடுவார்கள். ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு, கட்சி நிர்வாகிகள் பட்டியல் மாற்றியமைக்கப்படும்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!