வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (29/11/2017)

கடைசி தொடர்பு:15:13 (29/11/2017)

ஒரு கிணறு... நான்கு தற்கொலை! என்ன செய்ய வேண்டும் இனி?

ன்று, இரண்டு, மூன்று.. நான்கு இளம் குருத்துகள், பதினைந்து வயதுப் பிள்ளைகளின் உயிர்கள் அற்பமாகப் பறிபோயிருக்கின்றன... வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகிலுள்ள பனப்பாக்கத்தில், 11-ம் வகுப்பு மாணவியர் நான்கு பேர், கடந்த 24-ம் தேதியன்று ஒரே கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். 

அரக்கோணம் மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கிணறு

அரக்கோணம் அருகில் உள்ள இந்த பனப்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்தான், உயிரிழந்தவர்கள். என்ன நடந்தது? 

“ 11 மாணவிகள் சரியாகப் படிக்கவில்லை; அதனால் அவர்களை ஆசிரியர்கள் கண்டித்தனர். மறுநாள் பெற்றோரைக் கூட்டிவர வேண்டும் என ஆசிரியர் கூற, மறுநாள் பெற்றோரைக் கூட்டிவராத 4 மாணவிகள் பள்ளியில் பையை வைத்துவிட்டு, அருகிலிருக்கும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்” என்பது பரவலாகக் கூறப்படும் தகவல். 

இது உண்மைதானா என்றால், நடந்த சம்பவம் இதுதான் என பல தரப்பினரும் பலவிதமாகக் கூறிவருகின்றனர். ஏன், அரசு அதிகாரிகள் கூறியதாகவே வெவ்வேறு கோணத்தில் தகவல்கள் வந்துள்ளன. 

“ 11 மாணவிகள் சரியாக வகுப்பைக் கவனிப்பதில்லை என 24-ம் தேதியன்று பெற்றோரை அழைத்துவருமாறு ஆசிரியர் கூறினார். ஆனால்  அவர்களில் ஏழு பேர் மறுநாளன்று மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால், அவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற நான்கு பேரும் உயிரை மாய்த்துக்கொண்டார்கள்”- என காவல்துறை அதிகாரி கூறியதாகச் சொல்கிறது, ஒரு செய்தி. 

” நன்றாகப் படிக்காத மாணவிகள்மீது வழக்கமான ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பு மாணவிகளில் நன்றாகப் படிக்காமலும் சரிவர வகுப்புக்கு வராமலும் இருக்கும் 14 பேர் எச்சரிக்கப்பட்டனர். அவர்களில் 11 பேரை மறுநாள் பெற்றோருடன் வருமாறு ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இது அவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிகிறது. உரிய காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என மாவட்ட எஸ்.பி. பகலவன் கூறியதாக இன்னொரு செய்தி சொல்கிறது. 

இன்னொரு தரப்போ, “ வகுப்பு நேரத்தில் ஆசிரியர் ஒருவர் செல்பேசியில் பேசிக்கொண்டிருப்பார்; அதைப் பற்றி குறிப்பிட்ட சில மாணவிகள் கிண்டல்செய்து பேசிக்கொண்டனர்; அதனால் அந்த ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார்; அதையடுத்து அதே மாணவிகள் உட்பட பலரும் வகுப்புத்தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுக்கவும், பிரச்னைக்குரிய மாணவிகளை மட்டும் காலை பள்ளிக்கூடுகையின்போது சில ஆசிரியர்கள் கடுமையாகத் திட்டிவிட்டனர்; அத்துடன் பெற்றோரை மறுநாள் கூட்டிவருமாறும் சொல்ல, மாணவிகள் இப்படியொரு முடிவை எடுத்துவிட்டனர்” என வேறு தகவலைச் சொல்கிறார்கள். 

ஆசிரியர்கள் தரப்பில் கேட்டபோது,“மாணவிகளில் சிலர் செல்பேசியைப் பயன்படுத்தியதை ஆசிரியர்கள் கண்டித்தனர்; சில ஆசிரியர்கள்மீது குறிப்பிட்ட மாணவர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. மோசமாகப் படிப்பதைப் பற்றிக் கண்டிப்போடு கூறியதால், ஆசிரியர்கள்மீது குற்றம்சாட்டுகிறார்கள் ” என்ற தகவலும் வந்துள்ளது. 

“எல்லா இடங்களிலும் பற்றிப்படர்ந்திருக்கிற தனிப்பயிற்சி வியாபாரமும் இந்த துயரத்தின் பின்னணியில் முக்கிய காரணம்; அதற்குச் செல்ல வசதியில்லாத பிள்ளைகளைக் குறிபார்த்து திட்டுவதும் இங்கு நடந்திருக்கிறது” என்கிறார், வேலூர் மாவட்ட மூத்த செய்தியாளர் ஒருவர். 

உயிரிழந்த மாணவிகளில் இரண்டு பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் பள்ளியில் சாதிப்பாகுபாட்டுடன் நடத்தப்பட்டுள்ளதும் தற்கொலைக்குக் காரணம்; அது பற்றியும் விசாரணை நடத்தவேண்டும் என போராட்டங்களும் நடத்தப்பட்டன. பல இடங்களிலும் இருக்கும் சாதிப்பாகுபாடு இந்தப் பள்ளியிலும் இருக்கலாம்; ஆனால், இந்த தற்கொலைக்கும் சாதியத்துக்கும் தொடர்பில்லை என உள்ளூர்க்காரர்களும் கூறுகின்றனர். 

இந்த நிலையில் சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. அறிவித்துள்ளார். கோட்டாட்சியரின் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்; இன்றோ நாளையோ பள்ளிக்கல்வித் துறை இயக்ககத்துக்கு அறிக்கை கிடைக்கும்; அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். 

என்ன நடந்தது என்பதைக் கண்டறிவது முதல்கட்டம் மட்டுமல்ல, முக்கியமானதும் ஆகும். யார்மீது தவறு எனப் பார்ப்பதைவிட, ஆசிரியர்- மாணவர் உறவில் இருக்கும் பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வதுதான் தீர்வாக இருக்கும் என்கிறார்கள், கல்விச் செயற்பாட்டாளர்கள். 

சியாம் சுந்தர் மாணவி தற்கொலை

”குழந்தைகளின் படிப்பைத் தாண்டி அவர்களின் வருத்தம், தேர்வுத் தோல்வி உட்பட்ட பிரச்னைகளைப் பற்றி பகிர்ந்துகொள்ள, நம்பகமானவர்களாக பெற்றோரும் ஆசிரியரும் இருக்கவேண்டும். இன்றைய சமூக, பொருளாதார சூழலில் பெற்றோருக்கு இந்த வாய்ப்பு குறைவாக இருக்கிறது. புகார் சொல்வதற்காகப் பெற்றோரை அழைத்துவருமாறு கூறும்போது , குழந்தைகள் பயந்துவிடுகிறார்கள். குறிப்பிட்ட பள்ளியின் ஆசிரியர்கள், அந்தக் குழந்தைகளின் நம்பிக்கையை இழந்துவிட்டதால்தான், இப்படியொரு நிகழ்வு நடந்திருக்கவேண்டும். எனவே, பெற்றோரும் ஆசிரியரும் சேர்ந்து குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான வாய்ப்பை உண்டாக்கவேண்டும்.  மேலும், மாணவர்களின் வயதுக்கு ஏற்ப அவர்களிடம் நேர்மறை நடத்தைக்கான சூழலை உருவாக்குவதும் அவசியம்” என்கிறார், குழந்தைநேயப் பள்ளிகளுக்கான முன்முயற்சியாளர் சியாம் சுந்தர். 

”ஆசிரியர் - மாணவர் உறவை இரண்டு வகையான நபர்களுக்கு இடையிலானது என்று மட்டும் பார்க்காமல், அவர்களின் சூழல், அதாவது மாணவர் என்றால் அவர்களுக்கு 11-ம் வகுப்பிலும் பொதுத்தேர்வு என்பதைப் புகுத்தியது; தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டது; அதை எதிர்கொள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் இருக்கக்கூடிய வாய்ப்புகள், எதிர்கொள்ளமுடியாத அளவுக்கான தனிப்பட்ட, குடும்ப, சமூக, பொருளாதார நிலைமை ஆகியவை குறித்தும் ஆசிரியர்கள் தரப்பில் புதிய பாடமுறை, கற்பித்தல் முறை, தேர்வு முறைகளுடன் அவர்களுக்குள்ள ஈடுபாடு, ஈடுபாடின்மை, மாணவர்கள் மீதான அக்கறை, வழக்கமான பணியுடன் அவர்களுக்குத் தரப்படும் பணி அழுத்தம் போன்றவை குறித்தும் ஆய்வுசெய்யப்பட வேண்டும்” என்கிறார்கள் கல்வியியல் உளவியல் வல்லுநர்கள். 

”மேற்கூறப்பட்ட மூன்று விசாரணைகளில் இப்படியொரு பார்வை இருக்கிறதா என்பது பெரும் கேள்விக்குறிதான். எனவே, மாநில அரசின் சார்பில், கல்வித்துறை மாநில அதிகாரி, குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர், மனநல மருத்துவர், பதின்பருவ உளவியல் ஆலோசகர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு உண்மையறியும் குழுவை அமைத்து, இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்தவேண்டும்” என்கிறார்கள், கல்வியுரிமை - குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர்கள்.  

தமிழ்நாடு அரசு செவிசாய்க்குமா?


டிரெண்டிங் @ விகடன்