வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (29/11/2017)

கடைசி தொடர்பு:14:44 (29/11/2017)

செவிலியர்கள் போராட்டத்தில் 144 தடை உத்தரவு என்பது வதந்தி!

செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல், வதந்தி என்று தெரியவந்துள்ளது.

nurse protest
 

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், சென்னை  தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்று நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப்பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர். சிலர், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர். ஆனால் ஒரு பிரிவினர், ‘எங்களின் கோரிக்கைகள்குறித்து அரசாணை வெளியிடப்படும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று கூறி, போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றனர்.

nurses
 

இதனிடையே, இன்று காலை டி.எம்.எஸ் வளாகத்தில் எச்சரிக்கைப் பலகை ஒன்று வைக்கப்பட்டது. அதில், செவிலியர்கள் நடத்தும் போராட்டம் மருத்துவ சேவைகளைப் பாதிக்கிறது. எனவே, செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த நிலையில் டி.எம்.எஸ் வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  டி.எம்.எஸ் வளாகத்தில் பணிப்புரிபவர்கள், செவிலியர்கள் தவிர வேறு யாரும் அங்கு இருக்கக்கூடாது என்றும் தகவல்  வெளியானது. இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தப்போது, அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது வதந்தி. யாரோ பரப்பி விட்டிருக்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க