வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (29/11/2017)

கடைசி தொடர்பு:15:15 (29/11/2017)

மாநில அரசிடம் இருந்து நயவஞ்சகமாகத் திருடும் மத்திய அரசு! வைகோ சாடல்

தூத்துக்குடி நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்

"தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை 6 மாதத்துக்குள் மூடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது" என தூத்துக்குடியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, தூத்துக்குடியில் என்.டி.பி.எல் அனல்மின் நிலைய அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வந்த அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார். இது தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட வழக்கு, 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வைகோ உள்ளிட்ட 159 பேரும் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் நீதிபதி கதிரவன் முன்பு ஆஜர் ஆயினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

பின், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என  உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு வரவேற்கத் தக்கது. தமிழகம் முழுவதும் ஆற்று மணலில் பெரும் கொள்ளை நடைபெற்றுவந்த நிலையில், நிலத்தடி நீர் அதள பாதாளத்துக்கே சென்றுவிட்டது. பல இடங்களில் நிலத்தடி நீர் பொய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்காலம் கருதி, பலத்த யோசனைக்குப் பிறகு இத்தீர்ப்பு வந்துள்ளது. ஒரு யூனிட் மணலை ரூ.550 ரூபாய்க்கு வாங்கி, பலருக்கும் கமிஷன் சேர்த்து ரூ.40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையிடு செய்தால், அது மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும். மணல் எடுக்கக்கூடாது என்ற  நீதிமன்ற உத்தரவை முழு மனதோடு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கிறார்கள்.

ஆர்.கே.நகரில் ம.தி.மு.க போட்டியிடுவதுகுறித்து, வரும் டிசம்பர் 3-ம் தேதி  தாயகத்தில் கூடி முடிவெடுக்கப்படும். மத்திய அரசு, மாநில அரசிடமிருந்து நயவஞ்சகமாகத் திருடும் போக்கில் ஈடுபட்டுள்ளது. நியூட்ரினோ திட்டத்தில், நீதிமன்றத்தில்  நான் தடை வாங்கிய நிலையில், இத்திட்டத்தை அமல்படுத்தத் தடை இல்லாச் சான்று வழங்க வேண்டும் என மாநில அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.  தமிழக அரசின் செயல்பாடு மக்களைக் காக்கும் வகையில் இல்லை. இத்திட்டத்துக்கு மாநில அரசு தடையில்லாச் சான்று வழங்கிடக் கூடாது. ஜெயலலிதா இருக்கும்போது, அவர்  எதிர்த்த திட்டங்கள் அனைத்தையும் தற்போதைய மாநில அரசு ஆதரிக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்காமல் பார்த்துக்கொள்வது தேர்தல் ஆணையத்தின் கடமை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க