வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (29/11/2017)

கடைசி தொடர்பு:15:35 (29/11/2017)

`அரசு செய்வது நியாயமில்லை' - செவிலியர்களைச் சந்தித்த பிறகு நல்லகண்ணு பேட்டி

டி.எம்.எஸ் வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, `பல ஆண்டுகளுக்கு செவிலியர்களை தற்காலிக ஊழிர்களாக வைத்திருப்பது சரியல்ல. இந்த விஷயத்தில் அரசு செய்வது நியாயமில்லை' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நல்லக்கண்ணு

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், சென்னை  தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்று நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப்பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர். சிலர், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர். ஆனால் ஒரு பிரிவினர், ‘எங்களின் கோரிக்கைகள்குறித்து அரசாணை வெளியிடப்படும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று கூறி, போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களைச் சந்தித்த பிறகு நல்லகண்ணு, `பணி நிரந்தரம் உள்ளிட்ட செவிலியர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, இதற்குத் தீர்வு காண வேண்டும். ஆண்டுக் கணக்கில் செவிலியர்களை தற்காலிக ஊழியர்களாக வைத்துள்ளது சரியல்ல. இந்த விஷயத்தில் அரசு செய்வது நியாயமில்லை. அவர்களுக்கு கழிப்பறை வசதிகூட இல்லாத நிலையில் போராடிவருகிறார்கள்' என்று கூறினார்.