சென்னையில் இந்த வாகனங்களுக்கு திடீர் தடை! காவல்துறை அதிரடி

சென்னையில் காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரங்களில் தண்ணீர் லாரிகள் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில், மெட்ரோ ரயில் பாதை பணி காரணமாகப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகரித்துவரும் வாகனங்களால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்பட்டுவருகின்றனர். குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் சென்னை மக்கள் திணறுகின்றனர். இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆலோசிக்கப்பட்டது. அதில், தண்ணீர் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, தண்ணீர் லாரிகளை 'பீக் அவர்ஸ்' என்றழைக்கப்படும் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரையிலும் சென்னை மாநகரப் பகுதிகளுக்குள் இயக்க தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டது.  இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சென்னை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு, காவல்துறை சில நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவல்துறை நோட்டீஸ்

அதில், 'சென்னை மாநகர பகுதியில் தண்ணீர் லாரிகள் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மீறும் லாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸாரின் இந்த நடவடிக்கையால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, விபத்துகளின் எண்ணிக்கையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 'மக்களின் அடிப்படை மற்றும் அவசர தேவைகளில் ஒன்று குடிநீர். பீக் அவர்ஸில் குடிநீர் லாரிகளின் போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டால், மக்கள் பாதிக்கப்படுவர்' என்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!