தேசிய நெடுஞ்சாலையில் அச்சுறுத்திய கடத்தல் கார்! கும்பலின் கில்லாடித்தனம்...

அரியலூரில் இரண்டு நாள்களாகச் சாலையோரம் நின்றுகொண்டிருந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. வேறு எந்த நோக்கத்துக்காகக் காரை நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்களா என விசாரித்து வருகிறது காவல்துறை. 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  நாச்சியர்பேட்டை என்ற இடத்தில்
15 லட்சம் மதிப்புள்ள புதிய கார்  ஒன்று திங்கள்  இரவு முதல் கேட்பாரற்று சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவ்வழியே சென்றவர்கள் உடையார்பாளையம் காவல்நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில் சாலை ஓரம் நின்ற காரை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல் நிலையம் கொண்டு சென்று காரை சோதனை செய்தபோது அதில் முகமது, நாகப்பட்டினம் என்ற தகவல் இருந்தது.

இதையடுத்து போலீஸார் நாகை மாவட்டப் பகுதி காவல் நிலையத்தில் தொடர்புகொண்டதில், நாகை மாவட்டம், குத்தாலம் பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரிடமிருந்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்துச் சென்ற 3 நபர்கள் பந்தநல்லூர் அருகே ஓட்டுநரைத் தாக்கிவிட்டு, காரைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. கடத்திச் சென்ற கும்பல் 10 நாள்களுக்குப் பிறகு, ஜெயங்கொண்டம் - திருச்சி சாலையில் அதிக அளவில் வாகனச் சோதனைகள் இருப்பதாகத் தெரிந்ததால் காவல்துறையிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேறு வழியில்லாமல் அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை அருகே காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டுச் செ ன்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர் இந்தக் காரை யார் கடத்தி வந்தது; வேற எந்த நோக்கத்துக்காக காரை நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்களா என விசாரித்து வருகின்றனர். அதேபோல் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் ஏதேனும் குற்றவாளிகள் தென்படுகிறார்களா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!