கள்ளச்சாவி போட்டு ஜப்தி வாகனத்தில் உல்லாசப் பயணம்! சிக்கிக்கொண்ட ஆர்.டி.ஓ

ஜப்தி செய்த வாகனத்தை மாற்றுச்சாவி மூலம் பயன்படுத்திய சிவகாசி கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) தினகரன் மீது சிவகாசி சார்பு நீதிமன்றம் மூலம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிகாரிகள் எப்படி சட்டத்தை மதிக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

வீட்டு வசதி வாரியத்துக்காக நில ஆர்ஜிதம் செய்ததில் தங்களுக்குத் தர வேண்டிய இழப்பீட்டு தொகையில் மற்றொரு பகுதியான 19,94,469 ரூபாய் வரவில்லை என்று சம்பந்தம் உட்பட எட்டு பேர் தாக்கல் செய்த வழக்கில், பணத்துக்கு ஈடாகக் கோட்டாட்சியரின் ஜீப்பை ஜப்தி செய்யும்படி சார்பு நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் ஜீப் ஜப்தி செய்யப்பட்ட நிலையில், அதை நிறுத்தி வைக்க நீதிமன்ற வளாகத்தில் இடவசதி இல்லாத காரணத்தால், கோட்டாட்சியர் அலுவலத்திலுள்ள ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதில் ஜப்திக்கான நோட்டீசும் ஒட்டப்பட்டிருந்தது.

ஜப்தி செய்த வாகனத்தை

இந்த நிலையில் மாற்றுச்சாவி போட்டு அந்த ஜீப்பை வழக்கம்போல் தன் பயன்பாட்டுக்கு கோட்டாட்சியர் பயன்படுத்தி வந்துள்ளார். இத்தகவல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வரவே, இன்று சார்பு நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்தபோது ஜீப் பயன்படுத்தி வருவதை நேரில் கண்டு உறுதி செய்தனர். ஜப்தி செய்த வாகனத்தை, சட்டத்தை மதிக்காமல் பயன்படுத்தி வந்த கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவின் பேரில், சிவகாசி நீதிமன்ற சிராஸ்தார் மூலம் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!