'ஜோக்கர்களுக்கு எதைப் பார்த்தாலும் ஜோக்காகவே தெரியும்' - ஜெயக்குமாரைக் கிண்டலடித்த தினகரன்

''ஜோக்கர்களுக்கு எதைப் பார்த்தாலும் ஜோக்காகவே தெரியும்'' என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு கிண்டலாக டி.டி.வி தினகரன் பதில் அளித்துள்ளார். 


இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வுக்கே எனத் தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டியிட உள்ளார். இரட்டை சிலைச் சின்னம் குறித்த தீர்ப்புக்குப் பின்னர் தினகரன் ஆதரவு எம்.பி-க்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முகாமுக்கு, தங்கள் ஜாகையை மாற்றி வருகின்றனர். தற்போதைய சூழலில் தினகரனுக்கு ஆதரவாக ஒரே ஒரு எம்.பி மட்டுமே இருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரன், தன்னிடம் கூறிவிட்டே எம்.பி-க்கள் சென்றதாகக் கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `தினகரன் கூறுவது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்’ என்று விமர்சனம் செய்திருந்தார்.   

இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, தினகரன் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர், ``செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘தற்போது மக்கள் விரும்பாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆட்சி மீதான பிரதிபலிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு இருக்கும். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எங்களுக்கு நியாயம் வழங்குவார்கள். எங்களுக்கும் தி.மு.க.வுக்குமே இந்த இடைத்தேர்தலில் நேரடிப் போட்டி. இரட்டை இலையை மீட்க அதை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.பி-க்கள், தங்கள் பதவி பறிபோய்விடும் என்ற எண்ணத்திலேயே அணி மாறியுள்ளனர். இதுகுறித்து பேசிய ஜெயக்குமார், நான் பேசியது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக் என்று கூறியிருக்கிறார். ஜோக்கர்களுக்கு, எதைப் பார்த்தாலும் ஜோக்காகவே தெரியும். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு பாரபட்சமானது; தற்காலிகமானது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று நியாயம் பெறுவோம்’' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!