வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (29/11/2017)

கடைசி தொடர்பு:12:22 (30/11/2017)

போராட்டக் களத்துக்குச் சென்ற செவிலியர் ஜூலிக்கு போலீஸ் தடை!

சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவரும் அரசு ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த செவிலியர் ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.

கடந்த 2015-ம் ஆண்டு 7,243 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலந்தாய்வு மூலம் அவர்களுக்குப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. ஒப்பந்தக் காலத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும் அரசு வேலை என்பதால் பல்வேறு சிரமங்களை, பொருளாதார நெருக்கடிகளைச் சுமந்தபடியே செவிலியர்கள் வேலைபார்த்து வந்தனர்.

தற்போது, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாள்களாகச் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்கட்டமாக 200 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் ஒரு வருடம் கழித்து 1,000 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகச் செவிலியர்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர். இதை ஏற்க செவிலியர்கள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, இன்று காலை செவிலியர் ஜூலி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக டி.எம்.எஸ் வளாகத்துக்கு வந்தார். அவரைக் காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். அப்போது, காவலர்களிடம், `நானும் செவிலியர்தான். என்னை அனுமதியுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். ஆனால், காவல்துறையினர் ஜூலியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து ஜூலி அங்கிருந்து சென்றுவிட்டார்.