இரட்டை இலைக்கு போலீஸ் அமைப்பு ஆதரவு!

டிசம்பர் 21-ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்துக்குத் தங்களது ஆதரவை பகிரங்கமாக அறிவித்து இருக்கிறது காவலர் அமைப்பு ஒன்று. இதனால், காவல்துறை உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, 'தமிழ்நாடு காவலர் குடும்ப நல கூட்டமைப்பு'. இதன் தலைவராக எஸ்.ஜெயச்சந்திரன் என்பவர் செயல்படுகிறார். இந்தக் கூட்டமைப்பில், தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை ஆகிய தளங்களில் பணியாற்றும் காவலர்கள் வாழ்நாள் உறுப்பினராக இருக்கிறார்கள். இந்த அமைப்பு காவலர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலம். இதன் பொதுச் செயலாளர் கே.சண்முகம், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு, நமது கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து கொள்கிறது என்றும் அ.தி.மு.க வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, நமது கூட்டமைப்பு களப் பணியாற்றி உழைக்க முடிவெடுக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். இந்த அறிக்கை காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"காவல்துறையில் பலரும் எல்லாக் கட்சிகளிலும் ஆதரவாளராகவும் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும், வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். அப்படி இருப்பவர்கள் பெரும்பாலும் இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இரட்டை இலையை ஆதரிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டது தவறு. அத்துடன் காவல்துறைக் கட்டமைப்பில் உள்ள சிறைத் துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை காவலர்கள் அனைவரும்  கட்சி, ஜாதி சார்பில்லாமல் பொதுவாகச் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களை உறுப்பினராகக் கொண்ட எங்கள் அமைப்பு இப்படி முடிவெடுத்து இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறது' என்றார்கள் காவல்துறையினர். மேலும், இந்த அறிக்கை காவல் துறை உயரதிகாரிகள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கே.சண்முகத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். "எங்கள் அமைப்பில் 4,800 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினர் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலைக்கு நம்ம அமைப்பு ஆதரவு தெரிவிக்கணும். தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டம் போட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றணும்னு சொன்னாங்க. அதைத்தான் நாங்கள் செய்திருக்கோம். அதுபோல.ஆர்.கே.நகரில் இரட்டை இலைக்கு ஓட்டுக்கேட்டு பிரசாரமும் பண்ணப்போறோம்" என்றார் அதிரடியாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!