வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (29/11/2017)

கடைசி தொடர்பு:17:42 (29/11/2017)

செவிலியர்கள் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் 3 வது நாளாகப் போராடி வருகின்றனர். உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியும், செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. செவிலியர்கள் போராட்டத்துக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘செவிலியர்கள் முதலில் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அரசு மருத்துவமனையை ஏழை, நடுத்தர மக்களே நாடுகின்றனர். இந்தப் போராட்டத்தால் பல்வேறு நோயாளிகள் பாதிப்புக்குள்ளாக நேரிடும். போராட்டத்தைக் கைவிடும் வரை செவிலியர்கள் தரப்பு வாதத்தைக் கேட்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ளதால், பணிக்குத் திரும்ப நாளை மாலை வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று செவிலியர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், செவிலியர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேபோல், போராட்டத்தைக் கைவிட்டு செவிலியர்கள் பணிக்குத் திரும்பினால், சம ஊதியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.