குமரி மாவட்டத்தில் மழை எதிரொலி! பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மீண்டும் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனக் கடந்த சில நாள்களாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு கனமழை பெய்யவில்லை. மலையோரப் பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கணிசமான மழை பெய்யவில்லை. சாரல் மழை மட்டுமே பெய்துவந்தது. சாரல் மழை பெய்யத் தொடங்கியதால் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது. ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதுவும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், பரவலாக மழைப்பொழிவு இருப்பதால் தற்போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  

இன்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 30.20  அடியாக இருந்தது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 614 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 289 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், 123 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை வரை பாலமோரில் 9.4 மில்லி மீட்டர் மழையும் சிற்றார் இரண்டில் 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாரல் மழையாகப் பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!