வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (29/11/2017)

கடைசி தொடர்பு:08:08 (30/11/2017)

அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் தீக்குளித்துத் தற்கொலை!

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர், குடும்பப் பிரச்னை காரணமாகத் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சியின் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கோமதிநாதன். 8-வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். பத்திரப்பதிவராகத் தொழில் செய்துவந்த இவர் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே, பத்திரங்கள் விற்பனை மற்றும் பத்திரப் பதிவுக்காகக் கடை நடத்திவருகிறார். தொழில் காரணமாக இவர் சிலரிடம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது.

அதற்கான வட்டித் தொகையைச் செலுத்த முடியாமல் திண்டாடி வந்துள்ளார். இரு மகன்களைக் கொண்ட இவர் தன் 2-வது மகனுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துவைத்திருக்கிறார். அதிலும் கடன் ஏற்பட்டுள்ளது. அதனால் குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மனம் உடைந்த அவர், இன்று மாலை உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடல் முழுவதும் பற்றி எரிந்த நெருப்பைச் சமாளிக்க முடியாமல் வீட்டின் உள்ளே அங்கும் இங்கும் அவர் ஓடியதால், வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. வீட்டில் இருந்த ஏ.சி மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் வெடித்துச் சிதறின. வேகமாகப் பரவிய தீயில் கருகிய அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர். வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வுசெய்தனர். பாளையங்கோட்டை போலீஸார், அவர்  உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.