வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (29/11/2017)

கடைசி தொடர்பு:08:01 (30/11/2017)

கோவையில் முதுநிலை மருத்துவர்கள் போராட்டம்!

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், புதிய அரசு சாரா மருத்துவர்களை நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சுமார் நூறு பேர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம், புதிய அரசு சாரா மருத்துவர்களை நேரடியாகத் தேர்வு செய்துள்ளனர். இதன்மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும், அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் முறையாகக் கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புப் பறிபோயுள்ளது. இதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிலும் மருத்துவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  வெளிப்படையாகக் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், முறைகேடாக நிரப்பிய இடங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். சமூக நீதிக்கு எதிராக இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், நேரடியாக நியமனம் செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் முழக்கமிட்டனர். அரசாணை எண்: 132- ஐ அமல்படுத்த வேண்டும் எனவும், உடனடியாகப் போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க