வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (30/11/2017)

கடைசி தொடர்பு:07:43 (30/11/2017)

நோய்களுக்கு `நோ’ சொல்லும் நெல்லிச்சாறு... நாமே தயாரிக்க டிப்ஸ்! #HealthyGoosberry

`நெல்லிச்சாறு நல்லதா, கெட்டதா?’ இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் பேர் `நல்லது’ என்றுதான் பதில் சொல்வார்கள். நெல்லியின் மகத்துவமும் மருத்துவகுணமும் அப்படிப்பட்டது. ஆனால், உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும்விதமாக நெல்லிக்காய் பானம் தயாரித்து விற்றிருக்கிறது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் மீது கடந்த ஆண்டு நடவடிக்கைகூட எடுக்கப்பட்டது. அது, அப்போது பரபரப்பாக பேசப்பட்ட செய்தி. இப்போது பலரும் அதை மறந்தும் போயிருக்கலாம்.

நெல்லி ஜூஸ்


சேலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், 500 மி.லி நெல்லிக்காய் பானத்தை 150 ரூபாய்க்கு விற்றுவந்தது. பிறகென்ன... வியாபாரம் களைகட்டி, சூடுபிடித்தது. `நோய்களைக் குணப்படுத்தும்’ என்று கூறி விற்கப்பட்ட அந்த நெல்லிச்சாறு தரம் குறைந்தது, உடல்நலனுக்குத் தீங்கானது என்ற தகவல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறைக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, அந்த நிறுவனத்தின் மேல் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இப்போது பணிமாற்றம் செய்யப்பட்டு, விருதுநகரில் இருக்கும் டாக்டர் அனுராதாவைத் தொடர்புகொண்டு இது குறித்துப் பேசினோம்... 
``நெல்லிக்காய் பல நோய்களுக்கு அருமருந்து. அதைச் சாறாக்கி குடித்தால், உற்சாகம் கிடைக்கும். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நிறுவனம் 500 மி.லி நெல்லிச்சாற்றை 150 ரூபாய்க்கு விற்றது. தரமான, சுத்தமான 500 மி.லி ஜூஸ் தயாரிக்க 250 ரூபாய் ஆகும். நிலைமை இப்படியிருக்க, இது எப்படிச் சாத்தியமாகும் என்று புகார்கள் வந்தன. அதன்பேரில் நாங்கள் விசாரித்தோம். சோதனையில், 500 மி.லி சாற்றில் வெறும் 50 மி.லி நெல்லிச்சாறும் மீதித் தண்ணீரும் கலந்திருப்பது தெரிய வந்தது. அதுமட்டுமல்ல... அந்த பானம் கெட்டுப் போகாமல் இருக்க, அளவுக்கு அதிகமாக பென்சாயிக் ஆசிட் (Benzoic acid) சேர்க்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தோம்.
`இந்தச் சாற்றை அப்படியே குடிக்கலாம்’ என்று அந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது. ஆனால், நாங்கள் நடத்திய ஆய்வில் அந்தப்  பானத்தைக் குடித்தால், மிக விரைவில் குடல், இரைப்பை பாதிக்கப்பட்டு புண் ஏற்படும்; காலப்போக்கில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் உண்டு என்பது தெரியவந்தது. நெல்லிச்சாறு கெட்டுப்போகாமல் இருக்க, பென்சாயிக் ஆசிட், அஸ்கார்பிக்  ஆசிட் (Ascorbic acid) போன்றவை அதிக அளவில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அதன் விற்பனையை உடனடியாக நிறுத்தி தடைவிதித்தோம்’’ என்றார் அனுராதா.

ஜூஸ்


`நோய் தீர்க்கும்’ என்ற நம்பிக்கையில், ரெடிமேடாகக் கிடைக்கும் நெல்லிச்சாற்றை வாங்கி அருந்துவது மக்களுக்கு எளிதாக இருக்கலாம். ஆனால், அது முதலுக்கே மோசம் விளைவிக்கக்கூடியது என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. 
உடலுக்கு உற்சாகம் தரும், நோய்களைத் தீர்க்கும் நெல்லிச்சாற்றை நாமே எளிதாகத் தயாரிக்கலாம். அதற்கு முன்னர் நெல்லிக்காய் பற்றியும் அதன் மருத்துவகுணங்கள் பற்றியும் பார்ப்போம். நெல்லிக்காயில் `அரி நெல்லி’, `காட்டு நெல்லி’ என இரண்டு வகைகள் உள்ளன. காட்டு நெல்லியை, `மலை நெல்லி’, `பெரிய நெல்லி’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். காட்டு நெல்லிக்காயில் பழங்களுக்கு இணையான சத்துகள் நிறைந்திருப்பதால், இதை `நெல்லிக்கனி’ என்று சொல்கிறார்கள்.
துவர்ப்பு, புளிப்புச்சுவையுடன் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி சத்து, மிக எளிதாக உடலில் சேர்ந்து நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக்கூடியது. இதனால் வைரஸ் மூலம் பரவும் எல்லா வகையான நோய்களையும் கட்டுப்படுத்தும்.
தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டுவந்தால் கண் பார்வை தெளிவுபெறும்; கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். பற்கள், ஈறுகள் பலம் பெற உதவும். வாய் துர்நாற்றம் போக்கும். ரத்த சோகை போக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

ஜூஸ்


இது, ஜலதோஷம் வராமல் காக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கும் என்பது தவறு. காச நோயையும் குணப்படுத்தும், அஜீரணம், வயிற்றுக்கோளாறு, வாய்வுக்கோளாறுகளைப் போக்கும். குடல் வாயுவை அகற்றும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். பசியைத் தூண்டி உடலுக்குச் சுறுசுறுப்பு தரும். உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமலிருக்க உதவும். ரத்தச் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும், குடல் புண்களைக் குணப்படுத்தவும், உடல் சூடு குறைக்கவும் உதவும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை நிறுத்தும்.
இப்படிப் பல நோய்களைக் குணப்படுத்தும் நெல்லிக்காயை வெறும் வாயில் சாப்பிடப் பிடிக்காதவர்கள், சாறாக்கிக் குடிக்கலாம். இரண்டு காய்களை விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிய துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இவற்றை மிக்ஸியில் போட்டு இரண்டு டீஸ்பூன் வெல்லம், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்து அருந்தலாம்.
விதை நீக்கிய 10 நெல்லிக்காய்களை எடுத்து, சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். அதில் தேவைக்கேற்ப தேன், இளநீர் சேர்த்துக் குடிக்கலாம். 
விதை நீக்கிய நெல்லிக்காய் மூன்று, சிறு துண்டு தோல் நீக்கிய இஞ்சி, கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இதை வடிகட்டி அரை எலுமிச்சைப்பழச்சாறு, தேன், சர்க்கரை கலந்து அருந்தலாம். வெறும் நெல்லிச்சாறுடன் தேன் கலந்தும் குடிக்கலாம்.
இதுபோலப் பல வழிகளில் நெல்லிக்காயைச் சாறு எடுத்து ஃபிரெஷ்ஷாக அருந்தி வந்தால், நோய்கள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க