வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:07:49 (30/11/2017)

கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

பள்ளி கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியில் மாணவிகளை ஈடுபடுத்திய அரசுப் பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Teacher

திருவள்ளூர் மா.பொ.சி நகரில் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகிறார்கள். இந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவிகள் முறைவைத்து, பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்துவந்தனர். இதுகுறித்து மாணவிகளிடையே கடும் அதிருப்தி நிலவியது. சில ஆசிரியர்கள் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில பெற்றோர்கள், தலைமை ஆசிரியை மணிமேகலையிடம் முறையிட்டுள்ளனர். ஆனாலும், மாணவிகள்தான் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்துவந்துள்ளனர். 

 இந்நிலையில், வெறும் கையில் பாதுகாப்பு உறைகள் எதுவும் போடாமல், கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்யும் படம் சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் வெளியானது. இதையடுத்து, பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்தியது ஏன் என்று விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டார். மாவட்டமுதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் நேற்று அந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மாணவிகள், தலைமை ஆசிரியை, மற்ற ஆசிரியர்கள், பள்ளியின் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையை கலெக்டர் சுந்தரவல்லியிடம் அவர்கள் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மணிமேகலையை சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க