பெரியகுளம் மக்களை விடாமல் துரத்தும் டெங்கு.! − கண்டுகொள்வாரா ஓ.பன்னீர்செல்வம்?

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம். தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வந்த காலத்தில் தேனி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு அதிக பலிகள் நடந்தது இதே பெரியகுளத்தில்தான். பெரும்பாலும் குழந்தைகளை டெங்குவுக்கு இழந்து நின்றனர் இந்த ஊர் மக்கள். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் டெங்குக் காய்ச்சலால் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

சமீபகாலமாக டெங்கு பரவலின் வீரியம் குறைந்துவிட்டது என்ற போதிலும் பெரியகுளத்தின் நிலை வேறாக இருக்கிறது. தொடர்ந்து டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு படையெடுக்கிறார்கள் மக்கள். இன்று கூட, பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை விடுதியில் தங்கி செவிலியர் படிப்பு படிக்கும் உமாலட்சுமி (18) என்ற மாணவிக்கு டெங்கு கண்டறியப்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களம் கிராமத்தைச் சேர்ந்த பவதாரணி (10) என்ற சிறுமிக்கும் டெங்கு கண்டறியப்பட்டு, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பலர் காய்ச்சலால் மருத்துவமனைக்கு வந்து, டெங்குக் காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்துகொள்கிறார்கள்.

 

காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு வருமாறு மக்களுக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய இடம் பெரியகுளம். தனது சொந்த ஊரில் இப்படி  அடிப்படை சுகாதாரமே கேள்விக்குறியாகியுள்ளதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவனம் கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!