பயிர்க்காப்பீட்டுத் தொகை கேட்டு கலெக்டரிடம் கொந்தளித்த விவசாயிகள்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது தங்களுக்கு வர வேண்டிய பயிர்க்காப்பீட்டுத் தொகையை உடனே தருமாறு விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டனர். 

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், சி.பி.எம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, தி.மு.க மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன் ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேசும்போது, “கடந்தாண்டு செலுத்திய பயிர்காப்பீட்டுக்கு இன்னும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். புலியடிதம்பம் கூட்டுறவு வங்கியில் 1000 விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. வருவாய் கிராமம் மாறிப்போனதால் பாண்டியன் கிராம வங்கி இன்ஷூரன்ஸ் வழங்கவில்லை. இதுசம்பந்தமாக கடந்தவாரம் முதலமைச்சரை பார்த்து பேசிவிட்டுவந்தேன். பழைய குளறுபடிகளோடு இந்தாண்டு காப்பீட்டுத் தொகையை இணைக்கக்கூடாது.12,000 விவசாயிகள் இந்தப் பிரச்னையால் பாதிப்பட்டுள்ளனர்” என்றார். 

இதற்குப் பதில் அளித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர், “புலியடிதம்பம் கிராமத்தில் விடுபட்டுபோன விவசாயிகளுக்கு டிசம்பர் 1-ம் தேதி 3 கோடி 19 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மீதமுள்ளவர்களுக்கு அடுத்தமாத இறுதிக்குள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அதற்காகத்தான் நவம்பர் 30-ம் தேதிக்குள் இந்தாண்டுக்கான பயிர்க்காப்பீட்டை செலுத்தி முடிக்க தீவிர முயற்சி எடுத்துவருகிறோம். இந்த பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்படும்” என  உறுதியளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!