வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (30/11/2017)

கடைசி தொடர்பு:11:38 (30/11/2017)

``அ.தி.மு.க வேட்பாளர் யார்..?'' இன்று அறிவிப்பு வெளியாகிறது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரை அ.தி.மு.க ஆட்சிமன்றக்குழு இன்று தேர்வு செய்து அறிவிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம்

பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவித்து அதிரடிக்காட்டுவார் ஜெயலலிதா. இதை அவர், ஒவ்வொரு தேர்தலிலும் கடைப்பிடித்து வந்தார். ஆனால், இப்போது, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து இரட்டை இலையை வாங்கிய பிறகும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிறுத்தப்போகும் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க ஒருவாரமாக தயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், தொண்டர்கள் பலம் தங்களிடம்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் அவர்களால் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஏற்கெனவே, போனமுறை நின்ற, அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் பெயரை அறிவிக்க அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு தயங்குவது ஏன்? என்றக் கேள்வி இப்போது எழுந்துள்ளது. 

நா.பாலகங்காவை ஆதரித்து வடசென்னையில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ''ஆட்சிமன்றக் குழு கூடி, நவம்பர் 30-ம் தேதி அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம்'' என்று கூறியுள்ளார். மதுசூதனன் ( அவைத்தலைவர்), தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்), நா.பாலகங்கா (மாவட்டச் செயலாளர்), வக்கீல் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயின் (மாவட்ட துணைச் செயலாளர்), ஏ.ஏ.எஸ். முருகன் (வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்), ஆதிராஜாராம் (முன்னாள் மாவட்டச் செயலாளர்),  கு.சம்பத் (முன்னாள் செயல் அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை),  அஞ்சலட்சுமி (முன்னாள் கவுன்சிலர்) என்று 8 பேர் விருப்பமனு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பது இன்று தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க