வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (30/11/2017)

கடைசி தொடர்பு:08:54 (30/11/2017)

கன்னியாகுமரி அருகே புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், அடுத்த 48 மணி நேரத்துக்குத் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கன்னியாகுமரி அருகே புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பும், இதனால் 36 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.