வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (30/11/2017)

கடைசி தொடர்பு:20:38 (30/11/2017)

'ஓரம்கட்டப்படுகிறாரா ஒதுங்கியிருக்கிறாரா?' - ஓ.பன்னீர்செல்வத்தைச் சுற்றும் சர்ச்சை!

பன்னீர்செல்வம்

''ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் இருந்து என்ன பயன்? ஆட்சி, கட்சி என இரண்டு லகான்களும் எடப்பாடி பழனிசாமி கையில்தான் இருக்கின்றன. எல்லாம் தெரிந்தும் பன்னீர் அமைதி காப்பது ஏன்?'' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டனர் பன்னீரின் ஆதரவாளர்கள்.

'மனங்கள் ஒன்றிணையவில்லை' என்று பன்னீர் அணியின் முக்கிய நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கருத்து தெரிவித்த இரண்டு தினங்களில், மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் முப்பெரும் விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பே கொடுக்காமல் விழாவை நடத்திவிட்டார் அமைச்சர் உதயகுமார். இவ்விவகாரம் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த அஸ்பையர் சுவாமிநாதன் “யாருக்கும் அழைப்பும் இல்லை, தகவலும் இல்லை... தலைவர்கள் உட்பட! மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போல” என்று முகநூலில் பதிவு செய்தது எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மதுரைக்கு வந்த முதல்வர், 'ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு இல்லை' என்ற தகவல் தெரியவந்ததும், 'அவருக்கு அழைப்பு கொடுங்கள்' என்று அமைச்சர் உதயகுமாரிடம் கூறியுள்ளார். ஆனால், உதயகுமார்  தனியார் விடுதியில் தங்கியிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை நேரடியாக சந்தித்து அழைப்பு கொடுத்தபோதும், வர மறுத்துவிட்டார்.

 அதன்பிறகு அ.தி.மு.க-வின் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பன்னீர் அணிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உயர்நிலைக்குழு கூட்டத்திலும் எடப்பாடி அணியின் கையே ஓங்கியுள்ளது. அந்தக் கூட்டத்தில் பன்னீர் தரப்புக்கு பின்னடைவு என்றே சொல்லப்படுகிறது. மேலும், கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பன்னீர் அணியைச் சேர்ந்த மைத்ரேயனின் நடவடிக்கையை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதேபோல், அமைச்சர் சி.வி.சண்முகம் நேரடியாக மைத்ரேயனைத் தாக்கிப் பேசியுள்ளார். அப்போதும் பன்னீர் அமைதியாகவே இருந்துள்ளார்.

அ.தி.மு.க-வின் ஆட்சி மன்றக் குழுவில் நான்கு பேர் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தாலும், ஆட்சி மன்றக் குழுவில், இப்போது எடப்பாடி அணியினரே அதிகம் உள்ளார்கள். இந்த நிலையில், 'ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆட்சியிலும் பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை' என்ற புலம்பல் அவர்கள் ஆதரவாளர்கள் இடையே எழுந்துவருகிறது. பன்னீருக்கு நெருக்கமாக இருந்த எம்.பி-க்களுக்கு மத்திய அரசு நிதியிலிருந்து கொடுக்க வேண்டிய கமிஷன் தொகையை நிறுத்தி வைக்கச் சொல்லி முதல்வர் அலுவலகத்திலிருந்தே உத்தரவு போய் உள்ளது. இதை அந்த எம்.பி-யே பன்னீரிடம் சொல்லிப் புலம்பியுள்ளார். அவரோ, அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.

பன்னீர்- எடப்பாடி

'ஓ.பன்னீர் செல்வம் ஓரம்கட்டப்படுகிறார்' என்ற பேச்சு அ.தி.மு.க-வில் வெளிப்படையாகவே பேசப்பட்டுவருகிறது. கட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், கட்சியில் புதிதாக யாரையும் இணைத்துக் கொள்வதாக இருந்தாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில், ஓ.பன்னீர் செல்வத்தின் முடிவு அவசியம். ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்பு தினகரன் அணியிலிருந்து முதல்வர் அணிக்கு மாறிய மூன்று எம்.பி-க்கள் முதல்வரைச் சந்தித்து இணைந்தார்களே தவிர... ஓ.பன்னீர் செல்வத்தை மரியாதை நிமித்தமாகக்கூட சந்திக்கவில்லை. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் சம்பந்தமே இல்லாமல், கோயம்பேடு மார்க்கெட் ஆய்வுக்கு சென்று தன்னை மீடியா மத்தியில் வெளிப்படுத்திக்கொண்டார் என்கிறார்கள் சில விவரப்புள்ளிகள். 

ஆனால், பன்னீருக்கு நெருக்கமானவர்களோ வேறு விதமாகச் சொல்கிறார்கள் “ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலும், ஆட்சியிலும் ஓரம்கட்டப்படுவதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர் இப்போது ஒதுங்கியிருக்கிறார். சில நெருக்கடிகள் அவருக்கு இருப்பதால், இப்போது அமைதியாக இருக்கிறார். ஆனால், அவருக்கும் முதல்வருக்கும் நல்ல நெருக்கம் இருக்கிறது. அவர்களுக்குள் உள்ள நெருக்கம் பற்றி முக்கிய அமைச்சர்கள் சிலர் மட்டுமே அறிவார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் பாருங்கள் சில உண்மைகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கும். ஓ.பன்னீர் செல்வம் துறையில் இப்போது நடைபெற்று வரும் ஒப்பந்தங்கள் முதல்வர் அனுமதி இல்லாமலா நடைபெறுகிறது?” என்று பூடகமாக பதில் சொல்கிறார்கள்.

ஒதுங்கியிருக்கிறாரோ, ஒரம்கட்டப்படுகிறாரோ... நஷ்டம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு இல்லை; அவரை நம்பிப்போன நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும்தான்!