வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (30/11/2017)

கடைசி தொடர்பு:10:40 (30/11/2017)

நெல்லை மாவட்டத்தில் கனமழை: விடுமுறை அறிவிப்பால் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!

நெல்லை மாவட்டத்தில் இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மழையால் விடுமுறை

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, குமரிக்கடல் அருகே நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. குறிப்பாக, தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும். எனவும் எச்சரிக்கைப்பட்டது.

இந்த சமயத்தில் 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்றும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து கடலோரப் பகுதிகலில் மீனவர்கள் கடலுக்குள் செல்லாத வகையில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இரவு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு 30-ம் தேதி விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்து உள்ளார். நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்தார்.