வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:11:34 (30/11/2017)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், கார் மீட்பு - எஸ்.பி மகேந்திரன் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் மீட்கப்பட்டு, இதுதொடர்பாக நகை பறிப்பில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Rs 37 lakh worth of jewels and car  recovery in thoothukudi dist

எஸ்.பி., அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தூத்துக்குடியில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி நடந்த சங்கரராமேஷ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்களின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 15 பெண்களிடம் இருந்து நகைக் கொள்ளையர்களால் 69 பவுன் தங்க நகைகள் பறிக்கப்பட்டன. இதையடுத்து, ஆய்வாளர் வனசுந்தர் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் காக்கினியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அவரது மகன் சுபாஷ், மகள் சுஜி ஆகியோர் நகைக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னை, ஈச்சம்பாக்கத்தில் பதுங்கியிருந்த சுப்பிரமணியும், பின் ஒருவர் பின் ஒருவராக 3 பேரும் பிடிபட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் எந்த இடத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் விழா நடந்தாலும் செய்தித்தாள்கள் மூலமாக விழா நடக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு அங்கு சென்று நகைப்பறிப்பில் ஈடுபடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். தந்தை, மகன், மகள் ஆகிய 3 பேருமே கூட்டத்துக்குள் நுழைந்து தனித்தனியாக நகைப்பறிப்பில் ஈடுபடுவார்களாம். கடந்த 20 வருடமாக இவர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களிடமிருந்து 52 பவுன் நகைகள், திருட்டுக்கு பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட இவர்கள் மூவரும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலத்தில் பதிவு செய்யப்பட்ட 61 வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 74 பவுன் தங்கநகைகள், 123 கிராம் வெள்ளி, 18 பைக்குகள், 16 செல்போன்கள், கார் மற்றும் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரிடம் மீட்கப்பட்ட 52 பவுன் நகையின் மதிப்பு என மொத்தம் ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கநகை மற்றும் கார், பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன. கந்து வட்டி தொடர்பாக மாவட்டம் முழுவதும் தற்போது வரை 39 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க