இரட்டை இலை விவகாரம்! தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தினகரன் மேல்முறையீடு

இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார்.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கானப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை ஒவ்வொரு கட்சியினரும் நடத்திவருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடக்கும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் மக்களிடையே அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதை நிரூபித்துவிடலாம் என்று தி.மு.க-வினர் கருதுகின்றனர்.  ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தினகரன் அறிவித்துள்ளார். பா.ஜ.க போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கட்சியினர் பம்பரமாகத் தேர்தல் வேலையில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால், இரட்டை இலைச் சின்னம் கோரி தற்போது தினகரன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், “தேர்தல் ஆணைய உத்தரவை ரத்துசெய்து இரட்டை இலைச் சின்னத்தை எங்களுக்கே அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளேன். எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே தேர்தல் ஆணையம் இதற்கு முன்னர் நடந்துகொண்டது. இதனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!