வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (30/11/2017)

கடைசி தொடர்பு:12:10 (30/11/2017)

நெல்லையில் அடைமழை! குற்றாலம் மெயின் அருவில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவியில் குளிக்கத் தடை

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்துவந்தது. 29-ம் தேதி நள்ளிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் பாதுகாப்பு வளைவையும் கடந்து விழுகிறது.

கலங்கிய நிலையில், ஆபத்தான அளவுக்கு விழும் தண்ணீரில் குளிக்க முடியாத நிலை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மணிமுத்தாறு அருவியில் கடந்த 29 நாள்களாக குளிக்க அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அருவிக்குச் செல்லவே வனத்துறை அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நிரம்பி வழிகிறது. அதனால் அணைக்கு வரக்கூடிய 450 கன அடி தண்ணீர் முழுமையாக பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. பாசனத்துக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று அணையில் இருந்து அமைச்சர் ராஜலெட்சுமி தண்ணீர் திறப்பதாக இருந்தது. ஆனால், தற்போது பெய்யும் மழையின் காரணமாக அதை மாவட்ட நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது.

30-ம் தேதி காலை நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீர்மட்டம் 107 அடியாக உள்ளது. அணைக்கு 2881 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 506 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணைக்கு 2692 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 90 அடியாக உள்ளது. அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.