தலைமறைவானவரை பிடிக்க திணறும் போலீஸ்! முன்ஜாமீன் மனுவை திடீரென வாபஸ் பெற்றார் அன்புச்செழியன் | Anbu Chezhian withdraws anticipatory bail

வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (30/11/2017)

கடைசி தொடர்பு:12:03 (30/11/2017)

தலைமறைவானவரை பிடிக்க திணறும் போலீஸ்! முன்ஜாமீன் மனுவை திடீரென வாபஸ் பெற்றார் அன்புச்செழியன்

சினிமா படத்தயாரிப்பாளர் அசாேக்குமார் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவை சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் இன்று திடீரென திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சினிமா படத் தயாரிப்பாளரும் நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் கடந்த 21-ம் தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். "சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன்தான் காரணம்" என்று கடிதம் எழுதி வைத்திருந்தது தமிழ் சினிமா உலகில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அன்புச்செழியன்மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நடிகர் சசிகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அன்புச்செழியன்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, "அன்புச்செழியன்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தடுத்தாலும் விடமாட்டேன்" என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆவேசமாக கூறினார்.

இதனிடையே, தற்கொலை வழக்கில் அன்புச்செழியன் தலைமறைவானார். அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமல் தனிப்படையினர் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி அன்புச்செழியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமாருக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை. சசிகுமார் நடித்த `தாரை தப்பட்டை' படத்துக்காக நான் நிதியுதவி செய்தேன். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. எதிர்பார்த்த அளவில் படம் ஓடாததால் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நான் என்னுடைய கடனைத் திரும்பத் தருமாறு அசோக்குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் `கொடிவீரன்' படம் மூலமாக கடனைத் திருப்பி அடைப்பதாக கூறினார். இந்த அளவுக்கே பிரச்னை உள்ள நிலையில், நான் அவரிடம் வட்டிக்கு மேல் வட்டி கேட்டதாகவும், தரவில்லை என்றால் அவர்கள் வீட்டுப் பெண்களை தூக்கி விடுவேன் எனக்கூறி மிரட்டியதாகவும் என்மீது பொய்யான குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

திரைப்படத் துறையினருடன் கடந்த 30 ஆண்டுகளாக எனக்கு நெருக்கம் உள்ளது. படத்துக்கு நிதியுதவி செய்வதும், அந்த படம் திரையிடுவதற்கு முன்பே கொடுத்த கடனையும், வட்டியையும் சேர்த்து வசூலிப்பது நான் செய்துவரும் தொழில். வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூலிப்பது எப்போதும் இல்லை.  எனவே, அசோக்குமாரின் தற்கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும்" என்ற கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக நீதிபதி ஆதிநாதனிடம் அன்புச்செழியனின் வழக்கறிஞர் தெரிவித்தார். தனிப்படையினர் அன்புச்செழியனை தீவிரமாக தேடிவரும் நிலையில், முன்ஜாமீன் மனு திடீரென வாபஸ் பெற்றிருப்பது திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.