கணவரை கொன்றவரை மன்னித்த மனைவி! காப்பாற்றப்பட்ட தமிழர்

அரபு நாடுகளில் கொலை மற்றும் மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் முழுதும் சிறையிலிருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. இதில் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. அதே நேரம் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மன்னித்தால் குற்றவாளியை விடுதலை செய்யும் நடைமுறையும் உள்ளது.

குவைத்தில் வேலை செய்த கேரளா மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சாஜித் என்பவருக்கும் உடன் பணியாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த அர்ஜுன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் அப்துல் சாஜித் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தஞ்சாவூரில் மிகவும் வறிய நிலையிலிருந்த அர்ஜுனின் மனைவி மாலதி, மலப்புரம் சென்று கொலையான சாஜித்தின் குடும்பத்திடம் 'தெரியாமல் தன் கணவர் இதைச் செய்துவிட்டார், மன்னித்து விடுவிக்கச் செய்யுங்கள்' என்று கோரியுள்ளார். 

கொலையானவரின் மனைவி

அதற்கு அந்தக் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். அதே நேரம், மிகவும் வறுமை நிலையில் இருக்கும் சாஜித்தின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குங்கள் என்று உறவினர்கள் சொல்ல, உதவி செய்ய முடியாத நிலையிலிருந்த அர்ஜுனின் மனைவி, மலப்புரம் மாவட்ட முஸ்லிம் லீக் கட்சியினரிடம் தன் கஷ்ட நிலையைக் கூறவும், அவர்கள் ஓரிரு நாளில் தங்கள் கட்சியினர் மூலம் 25 லட்சம் வசூலித்து மாலதியிடம் கொடுத்துள்ளனர். அதை, அவர் சாஜித்தின் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார். 

அதைத்தொடர்ந்து, மன்னிப்புக் கடிதத்தை சாஜித்தின் மனைவி வழங்க, அதை இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தார் மாலதி. நெகிழ்ச்சியான இந்த நடவடிக்கைகள் மூலம் விரைவில் தாய்நாட்டுக்கு வரவுள்ளார் அர்ஜுன். மன்னிப்பும் மனித நேயமும்தான் மக்களை இணக்கமாக வாழ வைக்கும் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளே உதாரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!