வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (30/11/2017)

கடைசி தொடர்பு:15:45 (30/11/2017)

''ஆர்.கே.நகர் எங்களுக்கு இல்லை!'' கதறும் அ.தி.மு.க-வினர்

                                              ஆர்.கே.நகர்  தொகுதியில்  மதுசூதனன், டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர்த்தொகுதியின் வெற்றிவேட்பாளர் யார் என்ற கேள்வி, தொகுதியை வெளியில் இருந்து பார்ப்பவர்களால் எழுப்பப்படுகிறது. ஆளுங்கட்சியாகவும், தொகுதியைப் பலமுறை தக்க வைத்த கட்சியாகவும் இருக்கிற அ.தி.மு.க., வேட்பாளர் பெயரை அறிவிப்பதிலேயே நீண்ட இழுபறி நீடித்தது. கடைசியில், மதுசூதனன் தான் வேட்பாளர் என்று இன்று காலை அறிவித்துள்ளனர்.

கடந்த பொதுத்தேர்தல் காலகட்ட (ஏப்ரல், 2016) நிலவரப்படி, ஆர்.கே.நகர்த் தொகுதி மொத்த வாக்காளர்களாக 2 லட்சத்து 55 ஆயிரத்து 198 பேரும், அதில் ஆண்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 881 பேரும், பெண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 229 பேரும்,  திருநங்கைகள் 88 பேரும் என அந்தப் பட்டியலில் இருந்தனர். அப்போது நடந்த பொதுத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்றார். பின்னர், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதையடுத்து, அவர் நின்று வெற்றிபெற்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்தத் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் (கடந்த) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா கொடுத்தது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அந்தத் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். இப்போது மீண்டும் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. தேர்தல் தேதியாக டிசம்பர் - 21-ஐ அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குக் கடந்த முறை வாக்களித்த பலரின் பெயர்,  இந்த முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கவில்லை. ''போலி வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்கும்போது, போலி மட்டும்தானே  அதில் போக வேண்டும், உண்மையும் கலந்து வெளியே போய் இருக்கிறதே'' என்று பொதுமக்கள் பலர் கதறுகின்றனர். "தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை மட்டுமே நீக்கி இருக்கிறோம். கடந்த மாதம் 3-ம் தேதி முதல், நவம்பர் 30-ம் தேதி (நாளை) வரை, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தம் நடந்துவருகிறது" என்று  மாநகராட்சி பதில் அளித்துள்ளது.

தொகுதியில் இந்த நிமிடத்துக்கான அரசியல் நிலவரம், ஆளும் கட்சியின் வாக்குகளை மூன்றாகப் பிரிக்கிறது. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., அணிகள் என்ற பார்வை தொகுதியின் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கிறது... இதுபோக தினகரன் ஆதரவு வாக்குகள் என மூன்று பங்காகச் சிதறிக் கிடக்கிறது அ.தி.மு.க. வாக்குகள். இந்த மூன்றில் ஒரு பங்கு வாக்குகள்தான் ஆளும்கட்சிக்குக் கிடைக்கும். இந்த நிமிடம்வரையில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தர எந்தக் கட்சியும் முன்வரவில்லை. கடந்த இடைத்தேர்தலில், ஓ.பி.எஸ். அணிக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு அளித்தார். பிரிந்துகிடந்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.  அணிகள் தற்போது இணைந்துள்ள இந்தச் சூழ்நிலையில், 'யாருக்கும் ஆதரவு இல்லை' என்று வாசன்  கைவிரித்துவிட்டார். மறுபக்கம்,  தி.மு.க-வுக்குக் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு கொடுத்துள்ளது.  ஆர்.கே.நகர்த் தொகுதியில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக நேற்றுவரை இருந்தவர்கள், இன்று அமைச்சர் ஜெயக்குமாரின் கூடாரத்தில் ஐக்கியமாகி வருகின்றனர்.

                                ஸ்டாலினுடன் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்

இதுகுறித்து தொகுதி அ.தி.மு.க-வினர் சிலர், "இடைத் தேர்தலில் போட்டியிட ஒன்றுக்கு மேற்பட்டோர் விருப்ப மனு அளிப்பது அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை  நடக்காத விஷயம். இடைத்தேர்தல் வேட்பாளர் இவர்தான் என்பது முன்னரே தெரிந்துவிடுவதாலும், அது  'ஜெ'-வின் முடிவு என்பதாலும் யாரும் அப்படி விருப்ப மனு அளிக்கமாட்டார்கள். அதேபோல், விருப்ப மனு அளித்தாலும், அதற்கு வைப்புத்தொகை கட்டாமல் மனுத் தாக்கல் செய்யவும் அனுமதிக்க மாட்டார்கள். இப்போது எல்லாமே தலைகீழ் செயலாக ஆகிவிட்டது. விருப்ப மனு அளிக்க எந்தக் கட்டணமும் இல்லை என்ற தகவலால், மனுவோடு நீண்ட வரிசையில் போட்டியாளர்கள் காத்திருந்தார்கள் சென்ற இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தரப்பு ஆதரவு பெற்றவர்கள் ஆட்சியில் இருந்தனர். அந்தச் சூழ்நிலையிலும் ஓ.பி.எஸ். ஆள்கள் தெளிவாகச் செயல்பட்டு தினகரன் என்ற பெயர்கொண்ட வேட்பாளர்கள் நான்குபேரைப் போட்டியில் இறக்கிவிட்டனர். பெயர்க் குழப்பம் வரவே இந்தத் திட்டம் என்று சொல்லப்பட்டது. எதிர்த் தரப்பு எவ்வளவோ முயற்சி செய்தும் இரண்டு மதுசூதனன்களை மட்டுமே அங்கு போட்டிக்கு நிறுத்த முடிந்தது. இந்த முறை, டி.டி.வி.தினகரன் தரப்பு நான்கு மதுசூதனன்களை நிறுத்த ஆள்களை ரெடியாகக் கையில் வைத்திருக்கிறது.  2016, டிசம்பர் 5-ம் தேதி முதல் இன்றுவரையில் கட்சி சந்தித்து வரும் பிரச்னைகள் ஏராளம்... அதில் இதுவும் ஒன்று. தொகுதி எங்களுக்குக் கிடையாது என்பதை 'மேலே' இருக்கிறவர்களே தீர்மானித்துவிட்ட பிறகு நாங்கள் என்ன செய்ய முடியும்" என்றனர்.

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதிதான் ஆர்.கே.நகர்த் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு வெளியாகிறது. எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் இன்னொரு சோகம் ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுவிடுமா என்பதும் அன்றுதான் தெரியவரும்.


டிரெண்டிங் @ விகடன்