வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (30/11/2017)

கடைசி தொடர்பு:13:10 (30/11/2017)

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட விதிக்கப்பட்டத் தடையை நீக்க மத்திய அரசு முடிவு!

றைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாடு வெட்டத் தடை நீக்கம்

இந்த ஆண்டு மே 25-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட உத்தரவில், ``மாடுகளைச் சந்தையில் இறைச்சிக்காக வெட்டத் தடை விதிக்கப்பட்டது. இறைச்சிக்காக வெட்ட மாட்டோம் என்ற உத்தரவாதம் பெற்றுக்கொண்டுதான் சந்தையில் மாடுகளை விற்கலாம். விவசாய நோக்கத்துக்காக மட்டுமே மாடுகளை விற்க வேண்டுமென்றும் அந்தச் சட்டம் சொன்னது. முறையான ஆவணங்கள் இல்லாமல் வெளி மாநிலங்களுக்கு மாடுகளை அனுப்ப முடியாதச் சூழலையும் இந்தத் தடை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்தத் தடைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மக்களின் உணவு பழக்கவழக்கங்களில் மத்திய அரசு தலையிடுவதாக விமர்சனம் எழுந்தது. அதோடு, பசுக்காவலர்கள் என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றாலோ தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நிகழ்ந்தன. 

 ''மாடுகளை விற்பதோ அல்லது வெட்டுவதை தடுப்பதோ மத்திய அரசின் மிக முக்கியமான பிரச்னை இல்லை. அந்தச் சட்டத்தில் மாற்றம் செய்யத் தயாராக இருக்கிறோம். மிருகவதைச் சட்டத்தின் கீழ் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படவில்லை. இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதும் தடை செய்யப்படவில்லை'' என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்தச் சட்டத்துக்கு பல மாநிலங்களிலிருந்து கிடைத்த எதிர்மறையான தகவல்களின் அடிப்படையில், இறைச்சிக்காக மாடுகளை வெட்ட விதிக்கப்பட்டத் தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு கொண்டு வந்த தடைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஏற்கெனவே தடை விதித்தது. உச்ச நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றமும் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு கொண்டு வந்த தடையைத் தளர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க