வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:15:43 (30/11/2017)

`டோக்கன், குறுஞ்செய்தி மூலம் பொருள் தரக் கூடாது' - ஆர்.கே.நகர் வணிகர்களுக்கு தேர்தல் ஆணையம் கறார் உத்தரவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், டோக்கனுக்கோ குறுஞ்செய்தியில் சொல்வதை வைத்தோ எந்தப் பொருளும் கொடுக்கக் கூடாது என்று அந்தத் தொகுதி வணிகர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம். 

கார்த்திகேயன்

இதுகுறித்து சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், `256 பூத்கள்தான் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. ஆனால், 360 கன்ட்ரோல் யூனிட்டுகள் தயாராக உள்ளன. தேர்தலுக்கான வி.வி பேட் பெங்களூரில் இருந்து இன்று காலை வந்துள்ளது. அதைச் சோதனை செய்யும் நடைமுறைகள் நடந்துகொண்டிருக்கிறது. மத்திய காவல்படை சீக்கிரமே ஆர்.கே.நகருக்கு வரும். டோக்கனுக்கோ குறுஞ்செய்தியில் சொல்வதை வைத்தோ எந்தப் பொருளும் கொடுக்கக் கூடாது என்று வணிகர்களுக்கு எழுத்துபூர்வமாகவே உத்தரவு போட்டுள்ளோம். ஆர்.கே.நகர் தொகுதியில் 100 அல்லது 200 வங்கிக் கணக்குகளுக்கு ஒரே நேரத்தில் திடீரென்று 1,000 ரூபாயோ அல்லது 5,000 ரூபாயோ போட்டால் தெரிந்து கொள்ளும்படியான தொழில்நுட்பம் அமலில் இருக்கிறது. தினமும் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யலாம். அதேபோல, 5 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்பதில் எந்த மாற்றமும் இல்லை' என்று தெரிவித்தார்.