சுகாதாரமற்ற நிலையில் மதுரை நீச்சல்குளம்: மீட்குமா மாநகராட்சி..?

மதுரை காந்தி அருங்காட்சியகத்துக்கு அருகே உள்ளது 'மாநகராட்சி நீச்சல்குளம்'. ஒரு மணிநேரத்துக்கு இருபது ரூபாய், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இடம் எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் சுகாதார ரீதியாக மிகவும் பின்தங்கியே உள்ளது இந்த நீச்சல் குளம்.

நீச்சல் குளம்

இந்த மாநகராட்சி நீச்சல் குளத்தின் உண்மை நிலை அறிய நமது குழுவினருடன் பயணப்பட்டோம். நாம் சென்ற நேரம் மழை வேறு சாரலாகப் பெய்து சூழலை இதமாக்கியது. சரி, சாரலுடன் நீந்தலாம் என எண்ணிய நமக்கு அங்கு சென்றதுமே தூக்கிவாரிப் போட்டது. ப்ளாஸ்டிக் குப்பைகளும் காய்ந்த இலைகளும் மழை நீர், நீச்சல் குளத்து நீர் என கலந்து அழுக்கடைந்து பச்சை பசேலென்று இருந்தது. குளம்தான் இந்த லட்சணத்தில் உள்ளது என்று குளத்தில் இறங்குவதற்கு முன்பு ஷவர் பண்ணலாம் என சென்றால் அங்கு பைப்புக்கு பதில் வெறும் துளைகளே இருந்தன.அங்கிருந்தவர்களிடம் கேட்டதற்கு, ’அப்படியே இறங்குப்பா’ என நமக்குப் பெரும் அறிவுரைகள் கிடைத்தன.

சரி, குளத்தில் இறங்கித்தான் பார்ப்போமே என இறங்கினால் எதிரி நாட்டு வீரன் கத்தியுடன் நிற்பது போல நம்மை வரவேற்றன அங்கிருந்த உடைந்த ’டைல்ஸ்கள்’. நீச்சல்குளம் நல்ல விசாலமாக இருந்தாலும் அதன் பராமரிப்பு ரொம்பவும் மோசமாகவே இருந்தது. குளத்துக்குள் இறங்கப் பயன்படும் இரும்பு படிகளோ துருப்பிடித்தும் சில படிகள் சிதறிய நிலையிலும் கைகளைப் பதம்பார்க்கும் வண்ணம் இருந்தன. சிறிது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் பாதுகாப்புக்காக ஆட்கள் தேவையான அளவுக்கு இருந்தனர்.

அடுத்ததாக குழத்தைகள் விளையாடும் நீச்சல்குளத்தின் நிலையோ இன்னும் மோசமாகக் காட்சியளித்தது. அங்கு நமது கனுக்கால் அளவுக்குக்கூட தண்ணீர் இல்லை. மொத்தத்தில் நன்றாக நீந்தலாம் எனப் போனால் அதன் சூழ்நிலை நம்மை இருபது நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்க விடவில்லை. இறுதியாக ஒரு டைவ் அடித்து முடித்துக்கொள்ளலாம் என எண்ணி டைவ் அடித்தோம் நாம் குதித்த இடத்தில் பெயர்ந்திருந்த டைல்ஸ் நமது இடது காலின் நகத்தின் சிறு பகுதியை அக்குளத்தில் குளித்தற்காக பரிசாக வாங்கிக்கொண்டது.

ஒரு வழியாக எழுந்து உடைமாற்றும் அறைக்குச் சென்றோம். பெயருக்குத்தான் அந்த அறை இருந்ததே தவிர யாரும் அதற்குள் செல்லமுடியாதபடி அதன் மேற்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. நிற்கக்கூட இடம் இல்லாமல் உடைந்துபோன இரும்புப் பொருள்களும், கழிப்பறை கோப்பைகளும் நிறைந்திருந்ததன. குளத்தைவிட்டு வெளியேறி அதன் சுற்றுப்புற நடைபாதையில் இறங்கினால், "டெங்கு நிச்சயம்" எனப் பாராட்டு பெறும் அளவுக்கு இருந்தது அப்பகுதியின் சுகாதாரம். இந்த நீச்சல்குளத்தை நன்முறையில் பராமரித்தால் மாநகராட்சிக்கு வருவாய் லாபத்துடன், மக்களுக்கும் ஒரு பயனுள்ள விஷயமாக அமையும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு எடுத்து இதைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!