வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (30/11/2017)

கடைசி தொடர்பு:15:30 (30/11/2017)

மக்களின் குறைதீர்க்க கிராமத்துக்கு அரசுப் பேருந்தில் சென்ற கடலூர் கலெக்டர்!

அரசு பேருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அரசுப் பேருந்தில் பயணம் செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்னம் அருகேயுள்ள கொழை கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், அனைத்துத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் சுமார் 30-க்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள். அவர்கள் தனித்தனியே அவரரவர் வாகனத்தில் சென்றால் டீசல் செலவு விரயமாகி அரசுக்கு இழப்பீடு ஏற்படும். அதைத் தவிர்க்கும் வகையிலும், அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையிலும், அத்தோடுமட்டுமல்லாமல் அதிகாரிகள் காரில் சென்றால் கண்ணாடியை ஏத்திவிட்டுக்கொண்டு அக்கம்பக்கம்கூட பார்க்கமாட்டார்கள். அதனால், பொதுமக்களின் இயல்பு நிலையும், அவர்களின் இன்னல்களும் அவர்களுக்குத் தெரியமாட்டேங்கிறது. அதனால், அதிகாரிகள் அனைவரும் ஒரே பேருந்தில் செல்லலாம் என்று முடிவுசெய்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வட்நேரே.

அதன்படி, அரசு சிறப்புப் பேருந்து ஒன்றில் மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளும் கொழை கிராமத்துக்குப் பயணம் செய்தனர். அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கண்டெக்டரைக் கூப்பிட்டு மறக்காமல் டிக்கெட் எடுத்ததும், பேருந்தில் பயணம் செய்த அனைத்து அதிகாரிகளும் தடதடவென பாக்கெட்டை துழாவி கையில் கிடைத்த சில்லறையைக் கண்டெக்டரிடம் கொடுத்து அவரவர் டிக்கெட் எடுத்துக்கொண்டனர். விழா முடிந்து வரும்வரை பேருந்து காத்திருக்க வேண்டும் என்று பேருந்துக்கு வெயிட்டிங் சார்ஜும் போட்டனர். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது. "இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்புப் பேருந்தில் செல்லாமல், பயணிகள் செல்லும் பேருந்தில் சென்றால்தான் கிராமப்புறங்களில் பேருந்து இல்லாத வசதி அவருக்குத் தெரியும்" என்கிறார்கள் கிராம மக்கள்.