வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (30/11/2017)

கடைசி தொடர்பு:14:10 (30/11/2017)

`நோ கமென்ட்ஸ்' - தினகரன் குறித்து பேச மறுத்த மதுசூதனன்!

அ.தி.மு.க-வின் ஆட்சி மன்றக் குழு இன்று காலை சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் கூடியது. அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி சார்பில் தாக்கல்செய்யப்பட்டிருந்த 27 விருப்ப மனுக்களை பரிசீலித்தது ஆட்சி மன்றக் குழு. அதன்படி எடுத்த ஒருமனதான முடிவின்படி கழக அவைத் தலைவர் மதுசூதனன் அ.தி.மு.க சார்பில் அடுத்த மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தேர்தல் ஆணையத்திடம் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.

மதுசூதனனுக்கு சால்வை அணிவிக்கும் ஓ.பன்னீர்செல்வம்

இன்று போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தலைமை அலுவலகத்தைவிட்டு தொண்டர்களின் ஆரவார கோஷங்களுடன் வெளியே வந்த மதுசூதனனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்தினார். இதையடுத்து, செய்தியாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு தேர்தல்குறித்து கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். ஒரு பத்திரிகையாளர், `உங்களுக்கு எதிராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் களத்தில் உள்ளாரே அதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என்று கேட்டார். அதற்கு, `நோ கமென்ட்ஸ்' என்று கடுகடுத்துவிட்டு காரில் பறந்தார்.