வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (30/11/2017)

கடைசி தொடர்பு:15:50 (30/11/2017)

கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதைச் சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

மின்சாரம் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளத்தில், தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட இரு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு உலைகளும் செயல்பட்டு வந்ததால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இரு அணு உலைகளிலும் அடிக்கடி பழுது ஏற்படுவதால் சுற்றுப்புறப் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 4-ம் தேதி, இரண்டாவது அணுஉலையின் டர்பைனில் பழுது ஏற்பட்டது. 

அதன் காரணமாக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு, அணுஉலையைப் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றன. 4 மாத காலமாக நடந்த பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்ததால் நவம்பர் 20-ம் தேதி மீண்டும் மின்சார உற்பத்தி தொடங்கியது. டர்பைன் பழுது முழுமையாக சரிசெய்யப்பட்டுவிட்டதால் இனி இந்த அணு உலை முறையாக இயங்கும் என்றும் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த வாரத்தில் இந்த அணு உலை நிறுத்தப்பட்டது. பின்னர் சில மணி நேரங்களிலேயே மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் இன்று காலை 2-வது அணு உலை நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டிருப்பதாக அணு மின் நிலைய வட்டாரத்தினர் தெரிவித்தனர். கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் மின்சாரம் உற்பத்தித் தொடங்கும் என்றும் தெரியவந்துள்ளது.